பரபரப்பு அரசியலில் புயலைக் கிளப்பிய தருமபுரம் பட்டினப்பிரவேசம்! – நடந்தது என்ன?

தமிழக அரசியலில் பரபரப்பு புயலைக் கிளப்பியிருக்கிறது தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத் தடை! ஒருபக்கம் `இந்து மத சாஸ்திரங்களில் அரசு தலையிடக்கூடாது, இது எங்கள் பாரம்பர்யம்” எனத் தடையை எதிர்த்தும், மறுபக்கம் `மனித உரிமை மீறலைத் தடுத்து, மாற்றத்தை ஏற்கச் செய்யும் முயற்சி’ எனப் பாராட்டியும் கருத்து மோதல்கள் வெடித்திருக்கின்றன. இந்த நிலையில், பட்டினப்பிரவேசத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்!

தருமபுரம் ஆதீனம்

ஆதீனத்தின் பட்டினப்பிரவேச அறிவிப்பும், திராவிட இயக்கங்களின் எதிர்ப்பும்:

பழைமை வாய்ந்த மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தில், ஒவ்வோர் ஆண்டும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்தப்படும். அன்றைய தினம், ஆதீன குரு மகா சந்நிதானத்தை (ஆதீன கர்த்தர்) பல்லக்கில் அமரவைத்து, மக்கள் தோளில் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, மே மாதம் 22-ம் தேதி தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், `மனிதனை மனிதன் சுமக்கவைக்கும் செயல், ஒரு மனித உரிமை மீறல்’ எனக் கூறி திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பெரியாரிய இயக்கத்தினர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திராவிட கழகத்தினர் சார்பில் `தருமபுரம் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவு:

இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி, பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள 2022-ம் ஆண்டுக்கான பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வது மனித உரிமையை மீறிய செயல். இதனால் திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியைத் தடைசெய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவ்லகம்

இந்த அறிக்கையின் அடிப்படையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ன் அடிப்படையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும், மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தில் இந்த ஆண்டு நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை, பல்லக்கில்வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு தடைவிதித்து ஆணையிடப்படுகிறது. இதன் அடிப்படையில் சட்டம் மற்றும் ஒழுங்கை போலீஸார் பராமரிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

ஆதீனம் -ஆளுநர்

மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர் கொந்தளிப்பு:

இந்தத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை ஆதீனகர்த்தர் ஶ்ரீலஶ்ரீ ஹரிஹர ஶ்ரீஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமிழக அரசின்மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, “சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். ஆளுநர் வருகை விவகாரம்தான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியைத் தடைசெய்யக் காரணம். ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும்கூட பட்டினப்பிரவேசம் நடந்தது. ஆனால், தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். உயிரே போனாலும் பரவாயில்லை!” எனப் பேசி பரபரப்பைக் கிளப்பினார்.

அதைத் தொடர்ந்து மன்னார்குடி ஜீயரும் தனது எதிர்ப்பை ஆவேசமாகப் பதிவுசெய்தார். அதாவது, “பட்டினப்பிரவேசம் என்பது சம்பிரதாயத்தில் இருக்கக்கூடியது. பட்டினப்பிரவேசத்தைத் தடுக்கக்கூடிய அருகதை எந்த அரசாங்கத்துக்கும் கிடையாது! எந்த ஓர் இயக்கத்துக்கும் கிடையாது. அது நம்முடைய சிஷ்யர்கள் செய்யக்கூடிய ஒரு பணி. அதை அவர்கள் செய்தே தீருவார்கள். மேலும், இந்த தர்மதுரோகிகளுக்கும், தேசத்துரோகிகளுக்கும் நாங்கள் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறோம். இதேபோல் இந்து விரோதமான செயல்கள், இந்து விரோதமான கோயில் தலையீடு போன்ற இந்து தர்மத்தில் தலையிட்டால் அரசாங்கத்தின் எந்த ஓர் அமைச்சரும் ரோட்டில் நடமாட முடியாது!” எனக் கூறி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

மதுரை ஆதினம்,மன்னார்குடி ஜீயர்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு:

ஆதீனங்கள், இந்து மத அமைப்புகள் மட்டுமல்லாமல், சட்டமன்ற எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, தடையை நீக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, இது சமபந்தமாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து எவ்விதக் கட்டாயப்படுத்தலும் இல்லாமல், மனமுவந்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் சுமந்து வரும் ஆன்மிக நிகழ்வு, பக்தித் திருவிழா ஆகும்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால் இந்த ஆண்டு வரும் மே 22-ம் தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடைவிதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26-ன்படி வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தடை விதிக்க முடியாது. எனவே, ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்” எனப் பேசினார்.

அதைத் தொடர்ந்து பா.ஜ.க சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. அரசியலமைப்பு சட்டப்படி தடை விதிக்க முடியாது. மனிதனை மனிதன் தூக்க கூலிவாங்குவதுதான் தவறு. இது தாய், தந்தையை நாம் எப்படி தூக்கிப்போவோமோ அது போன்ற நிகழ்வு. இதற்குத் தடை விதிப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். எனவே, பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

நயினார் நாகேந்திரன்

தொடர்ந்து, பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, “ஆதீனங்களில் பல்லக்கு தூக்குவது என்பது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்தான் நடைபெறுகிறது. தூக்கிச் செல்பவர்களும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தான். தடை என்றால் மதங்களின் உள்ளே நுழைவதாகும். தேவாலயம், கிறிஸ்தவ பிரச்னைக்குள் செல்வதும், இஸ்லாமிய பிரச்னைகளுக்குள் செல்வதும் ஏற்புடையதாகாது. மதம் சார்ந்த பிரச்னையில் தடைவிதிப்பது ஏற்புடையதாக இருக்காது” எனக் கருத்து தெரிவித்தார்.

ஜி.கே.மணி!

அதேபோல, “ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன்” என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், தடையை மீறி பட்டினப்பிரவேசத்தை நடத்துவோம் என ஹெச்.ராஜா, குஷ்பு உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ஆதரவளிக்கும் இதர கட்சிகள்:

பட்டினப்பிரவேசத் தடைக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவன், நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வரவேற்றிருக்கின்றனர். இது குறித்துப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் விவகாரத்தில், மனிதாபிமான அடிப்படையில், மரபு அடிப்படையில், ஒருவரை உழைக்கும் மக்கள் தோளில் சுமப்பது ஏற்புடையது அல்ல. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருப்பப்பட்டால் அவர் தோளில் சுமக்கட்டும்” என பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், “மரபுகளில் இருவகை உள்ளது. ஒன்று.மாற்றத்தை மறுக்கும் இறுக்கமானது. இரண்டாவது மாற்றத்தை ஏற்கும் நெகிழ்வானது. முதலாவது, பழைமைவாதமெனும் பிற்போக்கு அடிப்படைவாதம். இரண்டாவது, புதுமைவாதமெனும் முற்போக்கு தாராளவாதம். முன்னது சனாதனம்! பின்னது சனநாயகம்! பல்லக்குத் தூக்குவது சனாதன மரபு. மறுப்பது சனநாயக மரபு!” எனவும் விளக்கமளித்திருக்கிறார்.

திருமாவளவன்

அதைத் தொடர்ந்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், “பல்லக்கில் மனிதனை மனிதன் தூக்கிச் சுமப்பதை எப்படிப் பார்த்தாலும் ஏற்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் இல்லாமல் இருந்ததால் தூக்கிச் சுமந்தோம். ஆனால் தற்போது நவீன வாகனங்கள் வந்துவிட்டன. முதலில் பிரவேசம் என்பதையே நான் ஏற்கவில்லை, எதற்கு மறுபடியும் சம்ஸ்கிருதத்தைப் பிடித்துத் தொங்க வேண்டும்… சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழியை எடுக்கிறார்கள், சம்ஸ்கிருதத்தைப் படி எனச் சொல்கிறார்கள், இது பெரும் சிக்கலாக உள்ளது. இந்தக் காலத்துலயும் மனிதனை மனிதன் சுமக்க வேண்டும் எனச் சொல்வது மாண்பு கிடையாது. இது பெரும் மதிப்புக்குரியவர்கள் செய்யும் செயலாக இருக்காது” எனக் கருத்து தெரிவித்தி

சீமான்

அமைச்சரின் விளக்கம்:

இந்தச் சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “தற்போது, இந்த நிகழ்வு தொடர்பாக ஆதீனத்தைத் தொடர்புகொண்டபோது, `மனிதனை மனிதனாக நினைக்கும் நடைமுறை பின்பற்றப்படும்’ என்று கூறியிருக்கிறார். எனவே சந்நிதானத்துக்கும், பட்டினப்பிரவேசத்துக்கும் பிரச்னை இல்லாமல் நடுநிலையாக நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். இதை அரசியலாக்க வேண்டாம். ஆதீனங்களுடன் அரசு பேசி சுமுக முடிவு எடுக்கப்படும்” என விளக்கமளித்திருக்கிறார்.

முதல்வரின் முடிவில் உள்ளது பிரச்னைக்கான தீர்வு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.