கேரளாவில் ஒரு தனியார் ஹோட்டலில் வாங்கிய பரோட்டா உணவுப் பொட்டலத்தில் பாம்புத் தோல் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அடங்காத சூழலில் அதே கேரளாவில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள நெடுமங்காடு நகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட ஒரு தனியார் ஹோட்டலில் வாங்கிய பரோட்டா உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோலின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்ததாக புகார் எழுந்ததை அடுத்து அந்த ஹோட்டல் ஆய்வு செய்யப்பட்டு மூடப்பட்டது.
செல்லம்கோட்டையைச் சேர்ந்த பிரியா, சந்தமுக்கில் உள்ள ஷாலிமார் ஹோட்டலில் இருந்து வாங்கிய சில பரோட்டாக்களை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தபோது பரோட்டாவை பேக் செய்யப் பயன்படுத்திய செய்தித்தாள் ஒன்றில் பாம்பு தோலைக் கண்டுபிடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பிரியா நகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தை ஆய்வு செய்தனர்.
ஹோட்டல் “மோசமான நிலையில்” செயல்படுவது கண்டறியப்பட்டதாக நெடுமங்காடு வட்டத்தின் உணவுப் பாதுகாப்பு அதிகாரி அர்ஷிதா பஷீர் கூறினார். “சமையலறையில் போதிய வெளிச்சம் இல்லை மற்றும் குப்பைகள் வெளியே கொட்டப்பட்டிருந்தன. இதனால் ஹோட்டலை மூட உத்தரவிட்டுள்ளோம். இந்த மோசமான சூழலில் ஹோட்டலை நடத்தியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.”என்று அவர் கூறினார்.
மீதமுள்ள உணவுகள் அனைத்தும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உணவுப் பொட்டலத்தை மடிக்கப் பயன்படுத்தப்படும் செய்தித்தாளில் பாம்பின் தோல் ஒட்டியிருந்ததாகவும் அதையும் ஆய்வு செய்து வருவதாகவும் பஷீர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM