பல முகமூடிகளுடன் இயங்கும் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ மோசமான இயக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம் என்றும், அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான ஆவணம். இது தீவிரவாத்திற்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்திய ராணுவம் அதிக திறன் வாய்ந்ததாக உள்ளது.

பல்வேறு நாடுகள் இந்தியா மீது போரை நிகழ்த்தி உள்ளனர். 1990-ம் ஆண்டு நான் ராணுவத்தில் ஒரு பிரிவில் சேர்ந்தபோது, தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தினசரி வழக்கமான ஒன்றாக இருந்தது.

பிரதமர் மோடி 2014-ல் பதவியேற்ற பின்பு, ராணுவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தீவிரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை.

அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள். அதுமட்டுமின்றி நம் நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது, ராணுவம் அதனை மிகவும் திறமையாக பாதுகாத்தது. அதற்கு மிகப் பெரிய நன்றிகள். புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை நம்முடைய ராணுவத்தினர் திருப்பி வழங்கினர்.

கடந்த சில ஆண்டுகளாக நாடு அமைதியான முறையில் இருந்து வருகிறது. இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்த பிறகு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு வர தொடங்கி உள்ளனர். இதற்கு முன்பு அங்கு தீவிரவாதம் மட்டுமே ஓங்கியிருந்தது. தற்போது அதுபோன்ற சூழ்நிலை அங்கு இல்லை.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம். இவர்கள் பல முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட புத்தகம், தீவிரவாதம் குறித்து அலசுகிறது. இதையோட்டி அவர் பேசும்போது இஸ்லாமிய இயக்கமான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.