சண்டிகார்: அரியானாவின் கர்னால் நகர் வழியாக தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்தி செல்வதாக ஒன்றிய உளவு துறையின் மூலம் அரியானா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரியானா மற்றும் பஞ்சாப் போலீசார் கூட்டாக நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் துப்பாக்கி, துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிபொருட்கள், ஆயுதங்களை கைப்பற்றி காரில் இருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பஞ்சாப்பை சேர்ந்த பூபிந்தர் சிங், குர்பிரீத் சிங், பர்மீந்தர் சிங் மற்றும் அமன்தீப் சிங் என்பது தெரிந்தது. ஆயுதங்களை தெலங்கானா மாநிலம் அடிலாபாத்துக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து கர்னால் எஸ்பி புனியா கூறுகையில், ‘‘தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், 2.5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்கள், ரூ.1.3 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளன. கைதான குர்பிரீத் பெரோஸ்பூர் மாவட்டத்தில் டிரோனைப் பயன்படுத்தி எல்லைக்கு அப்பால் அனுப்பப்பட்ட வெடிபொருட்களை பெற்றதாக தெரிவித்தான். பாகிஸ்தானில் உள்ள ஹர்விந்தர் சிங் ரிண்டா என்பவன் இவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது,’’ என்றார்.