பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிக ஆபத்தான இயக்கம்: ஆளுனர் ஆர்.என் ரவி திடீர் புகார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மறைந்த லெப்டினண்ட் ஜெனரல், சப்ரோடா மித்ரா எழுதிய ‘THE LURKING HYDRA’ என்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர் “இந்தியாவில் சமூக அமைதியைக் குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த அமைப்பு மனித உரிமைகள் அமைப்புகள் போல, செயல்பட்டு, ஆஃப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு சண்டையிட ஆட்களை அனுப்பி வைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: “மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய ‘THE LURKING HYDRA’ என்ற புத்தகம் சிறந்த ஆவணமாக இருக்கும். இந்திய ராணுவத்தின் சிறப்பு குறித்த புத்தகம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த குறையை இந்த புத்தகம் நிறைவு செய்யும்.

இந்தியாவில் சமூக அமைதியைக் குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். அது கிட்டத்தட்ட 60 முகமூடி அணிந்துள்ளது. வேறு வேறு பெயர்களில், மனித உரிமை, அரசியல்- மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். இந்த அமைப்பு மனித உரிமைகள் அமைப்புகள் போல, செயல்பட்டு, ஆஃப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு சண்டையிட ஆட்களை அனுப்பி வைக்கின்றனர். நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுகிறது.

அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.