`எங்க கட்சியில இவ்வளவு நாள் நாங்க எதிர்பார்த்துட்டு இருந்த விஷயம் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா நடக்கத் தொடங்கியிருக்கு. நாங்க என்னதான் கீழ்மட்ட அளவுல கட்சி வேலைகள் செஞ்சாலும், தமிழ்நாட்டு மக்கள் தலைவர்கள் அடையாளத்துக்குப் பின்னாடி போற பழக்கமுடையவங்க. ஐயாவால இதுக்குமேல எல்லா இடத்துக்கும் அலைஞ்சு திரிஞ்சு போக முடியாது. ஆனா, சின்னய்யா அன்புமணி ஏன் இப்படி இருக்கார்’னு ரொம்ப வருத்தப்பட்டோம். ஆனா, இப்போ அவர்கிட்ட உண்மையிலேயே மாற்றம் தெரியத் தொடங்கியிருக்கு…இனி நாங்களும் எந்தக் கவலையும் இல்லாம வேலைகளைத் தொடங்குவோம்” மிகவும் உற்சாகமாகப் பேசுகிறார்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வருவதே அவர்களின் தற்போதைய உற்சாகத்துக்குக் காரணம். இதுவரை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், மயிலாடுறை என வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாவட்ட அளவில் நடக்கும் பொதுக்குழுவில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். “அனைத்து கிராமங்களிலும் பா.ம.க., கொடி ஏற்றப்பட வேண்டும். 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் போதும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். கன்னியாகுமரி, தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்ட மக்களும் பா.ம.க., வை விரும்புகின்றனர். ஏனெனில் தகுதி, செயல் திட்டம் என அனைத்தும் பா.ம.க., விடம் உள்ளது.
இந்தியாவிலேயே கடந்த 20 ஆண்டுகளாக நிழல்நிதி அறிக்கை வெளியிடும் கட்சி பா.ம.க., தான். 2026 தேர்தலில் கோட்டையில் கொடியேற்றி, நிஜ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என நேரடியாக வந்து அன்புமணி ராமதாஸ் பேசுவது, மக்கள் மத்தியில் எந்தளவுக்கு எடுபட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, “ அன்புமணி இவ்வளவு நாள்கள் பேசியதற்கும் தற்போது பேசுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த அனுபவங்கள், பல்வேறு புதிய வியூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. நிச்சயமாக இது புது பாய்ச்சலாக இருக்கும்” என்ற நிர்வாகிகள் சிலர், கட்சிக்குள் தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர்
“சின்னய்யா அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் வருவது மட்டுமல்ல, முன்பெல்லாம் மாவட்டச் செயலாளர் அல்லது ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த மாநில துணைச் செயலாளரின் பரிந்துரையின் அடிப்படையில்தான் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், தற்போது தலைமையின் சார்பில் ஐந்துபேர்கொண்ட குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று, நேரடியாகக் கள ஆய்வு செய்துதான் நிர்வாகிகளை நியமனம் செய்கின்றனர். இது கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என நம்புகிறோம். தலைமைக் கழகத்தின் சார்பில் சென்ற குழு ஏனோதானோவென்று நிர்வாகிகள் தேர்வைச் செய்யமுடியாது. காரணம், அன்புமணி எந்தெந்த அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என அளவுகோல் கொடுத்திருக்கிறார். அவரே நேரடியாகவும் கண்காணிக்கவும் செய்கிறார். ஒரு சில நாள்களுக்குப் பிறகு அந்த மாவட்டப் பொதுக்குழுவில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். எங்கள் கட்சியிலேயே இது வித்தியாசமான அணுகுமுறை.
வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்த கையோடு தென் மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் நியமனங்கள், மாவட்டப் பொதுக்குழு நடந்து முடிந்தபிறகு மக்கள் சந்திப்பு, போராட்டங்களிலும் இனி நீங்கள் அவரைக் காணமுடியும். அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி அளவில் உள்ள பிரச்னைகள் என்ன என்பதைக் கண்டறிந்து அது சார்ந்த மக்களுடன் பேசுவது, அவர்களுடன் இணைந்து போராடுவது என கீழ்மட்ட அளவில் கட்சியைக் கொண்டு செல்ல பல வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல, சமீபத்தில்தான் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கங்கள் எங்கள் கட்சியின் சார்பில் தொடங்கப்பட்டன. ஏராளமான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக இணைந்து வருகின்றனர். அதேபோல, எங்களின் போக்குவரத்து சங்கத்திலும் ஏராளமான புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான போராட்டக் களங்களிலும் இனி நீங்கள் எங்கள் சின்னய்யாவைப் பார்க்கமுடியும். இனி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பா.ம.கதான்” என்றவர்கள், கூட்டணி குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
“2019 தேர்தலில் அ.தி.மு.கவின் கூட்டணி வைக்காமல் 2021 நாங்கள் தனித்து நின்றிருந்தால் பத்து எம்.எல்.ஏக்களையாவது பெற்றிருப்போம். மக்களுக்கும் எங்கள்மீது ஒரு நம்பிக்கை வந்திருக்கும். அதனால், 2024 நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்கான முன்னோட்டமாக இருக்கப்போகிறது. நிச்சயமாக இரண்டு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுடன் பேசுவோம். பாட்டாளிகளின் நலனுக்கான அணியாகக் கட்டமைப்போம். மூன்று கட்சிகளின் வாக்குகளும் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக பெரிய கட்சிகளுக்கு டஃப் கொடுக்கமுடியும். சொல்லமுடியாது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தி.மு.கவுடன் அதிருப்தி ஏற்பட்டு எங்களுடன் வந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. மொத்தமாக பத்து தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டால் போதும் 2026-ல் நாங்கள் நினைத்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்” என்கிறார்கள் நம்பிக்கையாக.
பா.ம.கவின் இந்த முன்னெடுப்புகள் எந்தளவுக்கு பலனளிக்கும் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்,
“ராமதாஸ் காலத்திலும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அது பெரியளவுக்குக் கைகொடுக்கவில்லை. தவிர, பாமகவுக்கும் தற்போதைய ஆளும் கட்சியான திமுகவுக்கும் கொள்கையளவில் பெரியளவில் வேறுபாடில்லை. அதனால், தீவிர எதிர் அரசியலை முன்னெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. அதை உணர்ந்துதான் திமுக ஆதரவு என்கிற நிலையில் தற்போது பாமக இருக்கிறது. முதலில், பாமகவுக்குச் செல்வாக்குள்ள வட, மத்திய மாவட்டங்களில் குறைந்தபடம் 40 தொகுதிகளில் கவனம் செலுத்தி வெற்றிபெறலாம். அதுதான் தென் தமிழகத்துக்குக் கட்சியை எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும். அதற்குப்பிறகு பலமான எதிர்க்கட்சியாகவோ இல்லை ஆளும்கட்சியாக வருவதற்கான முயற்சிகளிலோ இறங்கலாம்” என்கிறார் அவர்.