வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து வந்த பா.ஜ.,வை தேர்ந்த தஜிந்தர் பால் சிங் பக்காவை, மதங்களுக்கு இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பஞ்சாப் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து பக்காவை கடத்தி சென்றதாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரியானா போலீஸ் உதவியுடன் அவரை மீட்டு வந்தனர்.
டில்லி பா.ஜ., செய்தி தொடர்பாளராக உள்ளவர் தஜிந்தர் பால் சிங் பக்கா. முதல்வர் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாபின், மொகாலி மாவட்டத்தில் உள்ள சைபர் செல் போலீசார், இரு மதங்களுக்கு இடையே மோதலை தூண்டுதல், ஆத்திரமூட்டும் வகையில் பேசுதல், கிரிமினல் வழக்கு உள்ளிட்ட புகாரின் கீழ் தஜிந்தர் பால் சிங் பக்கா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, டில்லி வந்து, அவரை கைது செய்து பஞ்சாபிற்கு அழைத்து சென்றனர்.இது தொடர்பாக பக்காவின் தந்தை பிரீத் பால் கூறுகையில், 15 போலீசார், வீட்டிற்குள் நுழைந்து, தனது மகனை தாக்கி இழுத்து சென்றனர். இதனை வீடியோ பதிவு செய்த மொபைல் போனையும் பறித்து சென்றதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, தனது மகனை கடத்தி சென்றதாக டில்லி போலீசில் புகாரும் அளித்தனர்.
கைது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் நவீன் குமார் கூறுகையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பக்காவை கைது செய்ததாகவும், டர்பன் அணிய கூட அனுமதி வழங்கவில்லை என்றார்.
இந்த கைதை நியாயப்படுத்திய ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், பஞ்சாப் போலீசார் நியாயமாக நடக்கின்றனர். பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பக்கா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றனர்.
இது குறித்து டில்லி போலீசார் கூறுகையில், பக்கா கைது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை என்றனர். இதனை மறுத்த பஞ்சாப் போலீசார், நேற்று மாலை ஜானக்புரி போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் கூறப்பட்டதாக தெரிவித்தனர்.ஆதேநேரத்தில், பக்கா தந்தை அளித்த புகாரின் கீழ் ஆள் கடத்தல் வழக்கை டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில், பலத்த பாதுகாப்புடன் சென்ற பஞ்சாப் போலீசாரை தடுத்து நிறுத்திய ஹரியானா போலீசார், பக்காவை குருசேத்திரா போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற டில்லி போலீசார், பக்காவை மீட்டு கொண்டு வந்தனர்.
ஹரியானா போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் போலீசார், பக்காவை கடத்தி செல்லவில்லை என்றும், தேவையில்லாமல் தடுத்து நிறுத்தியதாகவும் புகார் கூறியுள்ளனர்.
Advertisement