பிரபல இந்தி டிவி நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட புரமோஷன்? – வெளியான மாஸ் போட்டோஸ்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளநிலையில், கபில் சர்மாவின் பிரபல இந்தி நிகழ்ச்சியில் பட புரமோஷன் தொடர்பாக கமல் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட 3 தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து, தனது அடுத்தப்படத்தை இயக்கி வருகிறார். ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் ட்ரெயிலர் இந்தியாவிலிருந்து முதல்முறையாக பிரான்சில் வருகிற 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

image

படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணியில் படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெற்கு ரயில்வேயின் ரயில் பெட்டிகளில் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒட்டப்பட்டு வெளியான புகைப்படம் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், ஸ்டான்ட்டப் காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் என கலக்கி வரும் கபில் சர்மா, சோனி டிவியில் ‘தி கபில் சர்மா ஷோ’ என்ற பிரபல நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தனது ‘விக்ரம்’ பட புரமோஷனுக்காக கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தி கபில் சர்மா ஷோ’ நிகழ்ச்சி செட்டில், கமல்ஹாசனுடன், கபில் சர்மா உற்சாகமாக கட்டிப்பிடித்துக்கொண்டு எடுத்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.