பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

நேற்று துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் மின் தடை ஏற்பட்டு, பின்னர் அரைமணி நேரத்தில் சரி செய்யப்பட்டதாகவும், வடசென்னை மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

பொதுத் தேர்வுகள் நடைபெறும் போது, தேர்வு மையங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் மின் தடைஏற்படக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. ஏனென்று சொன்னால், தேர்வு நடைபெறும் சமயங்களில் மாணவ, மாணவியரின் கவனம் படிப்பதில் தான் இருக்கும். அந்தத் தருணத்தில் மின் வெட்டு ஏற்பட்டால், குறிப்பாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டால் மாணவ, மாணவியர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் அவர்களுடைய கவனமும் சிதறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இதன் காரணமாக, மின்வெட்டு ஏற்பட்டபகுதிகளில் உள்ள மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகும். மின் வெட்டினால், மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் குறைந்து விட்டன என்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்த அரசிற்கு உள்ளது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில், தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.