புதுச்சேரியில் 24 சதவீத காடுகள் அழிப்பு: சபாநாயகர் செல்வம் வேதனை| Dinamalar

புதுச்சேரி: ‘புதுச்சேரியில் 24 சதவீத காடுகள் அழிக்கப்பட்டுள்ளது’ என, சபாநாயகர் செல்வம் பேசினார்.

புதுச்சேரி காலநிலை மாற்றப்பிரிவு, புதுச்சேரி சுற்றுச்சூழல் தகவல் மையம், டில்லி எரிசக்தி மற்றும் வள நிறுவனம் ஆகியவை சார்பில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி திட்டத்தில் காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா ஓட்டல் சன்வேயில் நேற்று நடந்தது.

பயிற்சி முகாமை துவக்கி வைத்து சபாநாயகர் செல்வம் சிறப்புரையாற்றினார். சம்பத் எம்.எல்.ஏ., தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா, சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் சபாநாயகர் செல்வம் பேசியதாவது:புதுச்சேரி நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் இருந்தன. இது, தற்போது 6 சதவீதமாக குறைந்துவிட்டது. அதாவது, 24 சதவீத காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகளவு நமக்கு தீங்கிழைத்தது. அதேநேரத்தில் சில நன்மைகளையும் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாசுக்கள் குறைந்து ஒசோனில் ஏற்பட்ட ஓட்டையின் அளவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

latest tamil news

ஸ்காட்லாந்தில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர், வரும் 2030க்குள் கரியமில வாயுவை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார். இதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கப்போவதாக கூறியுள்ளார். ஆர்.ஓ. தண்ணீர் குடிப்பதே கேடு விளைவிக்கும் என்கின்றனர். இதனால் நான் மழைநீரை குடிக்கிறேன். இந்த பயிற்சி முகாமில் எடுக்கும் முடிவுகளை அரசு செயல்படுத்த தயாராக உள்ளது.
இவ்வாறு, சபாநாயகர் பேசினார்.

இன்று 6ம் தேதி வரை நடக்கும் பயிற்சி முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று விவாதிக்கின்றனர்.நல்ல குடிநீர் வழங்க திட்டங்கள் தயார்சபாநாயகர் பேசும்போது, ‘நிலத்தடி நீரில் 50 டி.சி. நச்சுத்தன்மை இருந்தாலே குடிக்க முடியாது என்பார்கள். தற்போது, புதுச்சேரியில் 700 டி.சி. நச்சுத்தன்மை இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல குடிநீரை மக்களுக்கு வழங்க திட்டங்கள் தீட்டியுள்ளோம். விரைவில் செயல்படுத்த உள்ளோம்’ என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.