1818-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஆங்கிலேயர்களுக்கும் பெஷாவாக்களுக்கும் இடையே நடந்த போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலப்படையில் தலித் சமுதாய வீரர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். இந்தப் போர் வெற்றியின் நினைவாக புனே அருகில் உள்ள பீமா கோரேகாவ் என்ற கிராமத்தில் வெற்றித்தூண் ஒன்றை ஆங்கிலேயர்கள் அமைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி இந்த நினைவுத்தூணுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அங்கு கூடியிருந்தவர்களிடையே வன்முறை ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். முந்தைய தினம் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால்தான் மறு நாள் வன்முறை ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வன்முறையை தூண்டியதாக ஆந்திர எழுத்தாளர் வரவரராவ், வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சுதா பரத்வாஜ் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சிறையில்தான் இருக்கின்றனர். இந்த கலவரத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரிக்க மாநில அரசு கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. அந்த கமிஷன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் இதுவரை ஒருவர் கூட ஆஜராகவில்லை. இந்த நிலையில், முதல் முறையாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கமிஷன் உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதிலளித்தார்.
மொத்தம் 5 மணி நேரம் அவர் அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். பீமா கோரேகாவிலிருக்கும் போர் நினைவுச்சின்னத்தை தற்போது அதனை பராமரிப்பவரிடமிருந்து அரசு வாங்கவேண்டும் என்று சரத் பவார் தெரிவித்தார். தேச துரோக சட்டம் குறித்து உங்களது கருத்து என்னவென்று கேட்டதற்கு அச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும். இது குறித்து ராஜ்ய சபையில் பேசுவேன் என்று தெரிவித்தார்.