கேரள மாநிலத்தில், சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், தற்போது, புரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில், ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஷவர்மா தயாரிக்கும் அனைத்து ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரியா, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்குச் சென்றார். வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரிய வந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பிரியா வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கும் சீல் வைத்தனர். புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்த படத்தை சிலர் படம் பிடித்து வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.