பெங்களூரு:
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு விஷயத்தில் மென்மையாக நடந்து கொள்ளவில்லை. ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்று சொன்னேன். இதில் என்ன தவறு உள்ளது. தேர்வு எழுதாமலேயே போலி கல்வி சான்றிதழ் வழங்குவதில் மந்திரி அஸ்வத் நாராயண் நிபுணர் என்பது அனைவருக்கும் தெரியும்.
முன்பு அவர் நர்சுக்கு சான்றிதழ் வழங்கி பெயர் பெற்றார். அதையும் காங்கிரசார் கூற வேண்டும். இந்த அரசு எல்லாவற்றுக்கும் மவுனமாக உள்ளது. மத பிரச்சினைகள் நடந்தபோதும் இந்த அரசு அமைதியாக இருந்தது. அனைத்திற்கும் இந்த அரசு மவுனமாக இருப்பதை பார்க்கும்போது, மவுனம் சம்மதம் என்பது அர்த்தம்.
2 தேசிய கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். இந்த 2 கட்சிகளும் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். சித்தராமையா ஆட்சியில் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக ஷாம்பட் நியமிக்கப்பட்டார். அப்போது அனைத்து பணிகளுக்கும் பேரம் பேசப்பட்டது.
ஊழல் ஒழிப்பு பற்றி பேச காங்கிரசாருக்கு என்ன தகுதி உள்ளது. பா.ஜனதாவுக்கும் அதுகுறித்து பேச அருகதை இல்லை. தங்களுக்கு வேண்டியவர்களை அந்த பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமனம் செய்து அப்பாவி இளைஞர்களிடம் பணத்தை பறிக்கிறார்கள்.
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அந்த தேர்வாணைய உறுப்பினராக ஒருவரை நியமிக்கும்படி சித்தராமையா பரிந்துரை செய்தார். அந்த நபர் சரி இல்லை என்று தெரியவந்ததால் அவரது பரிந்துரையை நான் நிராகரித்துவிட்டேன். பணம் கொடுத்து அரசு பணிக்கு வருபவர்கள் சரியான முறையில் பணியாற்ற மாட்டார்கள். அவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. நான் முன்பு பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தினேன். அவை எல்லாம் என்ன ஆனது?.
இவ்வாறு குமாரசாமி கூறினர்.