சென்னை: மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன், கடந்த 12 ஆண்டுகளாக மதிப்பிட்டு வருகிறது. அந்த மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிய எம்பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கிறது.
இந்த ஃபவுண்டேஷன் சார்பில் 17-வது மக்களவையில் எம்பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அதன் நிறுவனர் ப்ரைம் சீனிவாசன் கூறியதாவது:
மக்களவையின் செயல்பாடுகளை பிஆர்எஸ் இந்தியா என்ற அமைப்பு ஆராய்ச்சி செய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 எம்பி.க்கள் உள்ளனர். கடந்த ஜூன் 2019 முதல் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரை 40 எம்பி.க்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழக எம்பி.க்களில் தருமபுரி திமுக எம்பி.எஸ்.செந்தில்குமார் 386 புள்ளிகளுடன் தமிழக அளவில் முதலிடத்திலும், தேசிய அளவில் 18-வதுஇடத்திலும் உள்ளார். எம்பி. செந்தில்குமார் தொடர்ந்து முயற்சித்தால் முதலிடம் பிடித்து, ‘சன்சத் ரத்னா’ விருது பெற முடியும்.
தென்காசி திமுக எம்.பி. தனுஷ்குமார் 348 புள்ளிகளுடன் தமிழக அளவில் 2-ம் இடத்திலும், தேசிய அளவில் 31-வது இடத்திலும் உள்ளார். தமிழக அளவில் செந்தில்குமார் 322 கேள்விகளை எழுப்பி முதல் இடத்திலும், தனுஷ்குமார் 317 கேள்விகள் எழுப்பி 2-ம் இடத்திலும் உள்ளனர். இருவருமே 99% அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
தேசிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி. சுப்ரியா சுலே 569 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் 84 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று, தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளார். இவர் தேசிய அளவில் ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி 205 புள்ளிகள் பெற்றுள்ளார். 65 சதவீத அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் 6 தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்து, தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தருமபுரி எம்.பி. எஸ்.செந்தில்குமார் கூறும்போது, ‘‘திமுகவில் 24 உறுப்பினர்கள் உள்ளனர். விவாதங்களின்போது ஒருகட்சிக்கு ஒருசிலரே பேச முடியும். எனக்கு விவாதத்தின்போது பேசும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். இதனால் தேசிய அளவில் முதலிடம் பிடிப்பது சிரமம். தனியார் மசோதா, கேள்விகள் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட முடியும். முதலிடம் பிடிக்க முடிந்தவரை முயற்சிப்பேன்’’ என்றார்.
தென்காசி எம்.பி. தனுஷ்குமார் கூறும்போது, ‘‘திமுக என்றாலே மத்திய அரசை எதிர்த்துப் பேசுவோம். இவர்களுக்கு எதற்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்ற மனநிலை மக்களவையில் உள்ளது. அதனால் திமுகவுக்கு விவாதத்தின்போது வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பிலும், திமுக மூத்த எம்.பி.க்கள் பேச வேண்டியிருக்கும். எனவே, போராடி நேரம்பெற்று, விவாதத்தில் பங்கேற்றுதான் இந்த நிலையை அடைந்திருக்கிறோம். முதலிடத்துக்குச் செல்ல முயற்சிப்பேன்’’ என்றார்.