மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 'ராக்கிங்' தடுப்பு நடவடிக்கை தீவிரம்: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனி விடுதி

மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் குற்றங்களை தடுக்க முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு சீல் வைக்கப்பட்ட தனி விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விடுதியின் நுழைவு, வெளியேறும் வாசல்கள், கல்லூரி வளாகங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

கடந்த 1996ம் ஆண்டிற்கு முன் வரை தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை செய்த ராக்கிங் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வராமலே இருந்தது. அதன்பிறகு 1996ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு(17), சீனியர் மாணவர் ஜான் டேவிட்டால் ராக்கிங் கொடுமையால் படுகொலை செய்யப்பட்டார்.

உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து கல்லூரிகளில் ராக்கிங் கொடுமைகளை தடுக்க தனி குழு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் அதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

மதுரை மருத்துவக் கல்லூரியிலும் டீன் தலைமையில் கல்லூரி துணை முதல்வர், விடுதி வார்டன், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர் உள்பட பல்வேறு உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆண்டி ராக்கிங் கமிட்டி குழு ஏற்படுத்தப்பட்டு ராக்கிங் செய்வோர் கண்காணிக்கப்பட்டனர். ஆனால், அதையும் மீறி 2018ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ராக்கிங் நடந்தது.

முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்து வந்துள்ளனர். மீசை வைக்கக்கூடாது, முழுக்கை சட்டைப் போடக்கூடாது, சீனியர் மாணவர்கள் வந்தால் அவர்களை கடந்து செல்லக்கூடாது, இரவு நேரத்தில் தூங்காமல் எங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் போன்ற விசித்திரமான உத்தரவுகளை இட்டு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்தனர். மேலும், இரவு நேரத்தில் தரைத்தளத்தில் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களை சுவர் வழியே ஏறி மாடிக்கு வரச்சொல்லி ராக்கிங் செய்தனர். பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் இ-மெயில் மூலம் தேசிய மருத்துவ கவுன்சிலில் புகார் செய்தனர்.

இதையடுத்து மருத்துவக்கல்லூரி நிர்வாகம் ராக்கிங் செய்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 19 பேரை 6 மாதத்திற்கு கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு ஓரளவு ராக்கிங் நடப்பது தடுக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் தற்போது முழுமையாக ராக்கிங்கை தடுக்க முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு தனி விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விடுதியின் நுழைவு, வெளியேறும் வாசல்கள், கல்லூரி வளாகங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு விடுதியின் கீழ் தளத்தில் தனி பகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த பகுதி சீனியர் மாணவர்கள், அந்நியர்கள் யாரும் நுழையாதப்படிக்கு சீல் வைத்து அந்த விடுதிக்கு செல்லும் நுழைவு வாயில், வெளியேறும் வாயில் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் வைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த விடுதி அறைகளில் சீனியர் மாணவர்கள் யாரும் உடன் தங்க அனுமதியில்லை. அதுபோல், விடுதி வளாகங்கள், கல்லூரி வளாகங்கள், வகுப்பறை வளாகங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் வைத்து அனைத்து மாணவர்கள் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதிகளில் மட்டும் காமிராக்கள் வைக்கப்படவில்லை. மேலும், இரவில் ஆண்டி ராக்கிங் டூட்டி ஒரு உதவிப்பேராசிரியருக்கு போட்டு அவர் ராக்கிங் இருக்கிறதா? என்று கண்காணிப்பார். ஒரு கொள்ளை, திருட்டு வழக்குகளை எப்படி போலீஸார் நெருக்கமாக சென்று கண்காணிப்பாளர்களோ அதுபோல், கல்லூரியில் எக்காரணம் கொண்டு ராக்கிங் நடந்துவிடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு, அடிக்கடி விசாரணை போன்றவை நடக்கிறது,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.