திருவனந்தபுரம்: மலையாள நடிகை அளித்த பாலியல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த பிரபல நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி காவல்துறை சர்வதேச போலீஸ் உதவியை நாட முடிவு செய்துள்ளது. மலையாள இளம் நடிகை ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். கடந்த 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக கோரி, கொச்சி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு ஆஜராக மே 19ம் தேதி வரை தனக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று விஜய் பாபு பதிலளித்தார். இதை ஏற்க மறுத்த போலீசார் அவரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக கொச்சி நகர துணை போலீஸ் கமிஷனர் குரியாக்கோஸ் கூறுகையில், இதற்காக ஒன்றிய அமைச்சகத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அவரை கைது செய்ய ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டு போலீசாரால் அவரை கைது செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், துபாய், குவைத், கத்தார் உள்பட வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்களது கருப்பு பணத்தை விஜய் பாபுவின் பெயரில் மலையாள சினிமாவில் முதலீடு செய்து உள்ளதாக கிடைத்த புகார்களை தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது