விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூரை சேர்ந்தவர் பாக்கியராஜ். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே, மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். எனவே, உடன் பிறந்த சகோதரி மேரி ஆதரவுடன், பாக்கியராஜ் தனியே ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நள்ளிரவு பாக்கியராஜ் வீடு திரும்பிய நேரத்தில், இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்காமல், உறவினர்களே ஒன்று சேர்ந்து பாக்கியராஜின் உடலை அருகே உள்ள இடுகாட்டில் புதைத்து விட்டனர்.
இந்த நிலையில் நேற்று பாக்கியராஜ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற மேரி, வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பல்வேறு இடங்களிலும், சுவரிலும் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தனது சகோதரன் பாக்கியராஜ் அடித்துக் கொலைச் செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், பாக்கியராஜின் உடன்பிறந்த மூத்தச்சகோதரன் அந்தோணிராஜ் என்ற வேல்முருகனுக்கும், பாக்கிராஜூக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்பகை இருந்தது தெரியவந்தது.
இதை மனதில் கொண்டு தம்பி பாக்கியராஜை அடித்துக் கொலைசெய்து விட்டு, அவர் விபத்தில் இறந்ததுபோல் ஜோடித்து நாடகம் நடத்தியது அம்பலமானது. இதைத்தொடர்ந்து, வேல்முருகனை போலீஸார் கைதுசெய்தனர்.
தொடர்ந்து, அவரின் இளைய சகோதரர் குமார் அடையாளம் காட்டிய இடத்தில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பாக்கியராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பாக்கியராஜின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால், மயானத்திலேயே, விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவர் சுதன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.