இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், அந்நாட்டில் உணவு, மருந்து பொருட்கள், பெட்ரோல், டீசல், போன்ற பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால், இலங்கை மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழக அரசு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், அங்கே உள்ள இலங்கை தமிழர் தலைவர்கள், உள் நாட்டுப் போருக்கு பிறகு, இபோதுதான் சிங்களவர்களும் தமிழர்களும் தற்காலிகமாகவேனும் ஒன்றாக சேர்ந்துள்ளார்கள். அதனால், அனைவருக்கும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, இலங்கை மக்களின் துயரைத் துடைக்க, தமிழ்நாடு அரசு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக அண்மையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசும், தமிழக அரசு இலங்கைக்கு பொருட்களை அனுப்ப அனுமதி அளித்தது.
இந்த நிலையில், இலங்கையின் கௌரவ பிரதமரான மஹிந்த ராஜபக்ச தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தை உறித்து நிற்கின்றது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”