மேடையில் தாக்கப்பட்ட காமெடியன் டேவ்; `அது வில் ஸ்மித்தா'- கிறிஸ் ராக்கின் கமென்ட்!

டேவ் சாப்பல் (Dave Chappelle) அமெரிக்காவின் பிரபலமான ஸ்டான்ட்- அப் காமெடியன். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நெட்பிலிக்ஸ் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேவ் சாப்பல் மீது தாக்குதல் நடந்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்திருக்கும் ஹாலிவுட் பவுல் எனும் இடத்தில் நெட்பிளிக்ஸ் ஒருங்கிணைக்கும் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் டேவ் பங்கேற்றார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் பங்கேற்பாளர் பகுதியில் இருந்து ஒருவர், மேடையில் ஏறி டேவ்வை தாக்க முயன்றார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

Netflix is a Joke: The Festival என்ற பெயரில் நெட்பிளிக்ஸ் தொடர் காமெடி நிகழ்ச்சிகளை ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் இருந்து நடத்தி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஃபர்பார்ம் செய்வதற்காக வந்திருந்த காமெடியன் டேவ் சாப்பல் தாக்குதலுக்கு உள்ளானார்.

அவர் மேடையில் இருக்கும் போது பங்கேற்பாளர் பகுதியில் இருந்து Isaiah Lee என்கிற 23 வயது மனிதர் மேடையில் ஏறி நின்று கொண்டிருந்த டேவ் மீது பாய்ந்தார். இவரது தாக்குதலால் டேவ் நிலைகுலைந்து மேடையின் தளத்தில் கீழே விழுந்தார். அந்த மனிதர் கையில், போலி துப்பாக்கி ஒன்றும் இருந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் பகுதியில் என்ன நடக்கிறது என தெரியாது சலசலப்பு எழுந்தது.

அதற்குள் காவலர்கள் அந்த மனிதரைத் துரத்திப் பிடித்தனர். அவர் மீது ஆயுதம் ஏந்தித் தாக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டேவ்க்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஏற்கெனவே கடந்த வருடத்தில் டேவ்வின் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் மாற்று பாலினத்தவரை இழிவுபடுத்தியதாக விமர்சனம் எழுந்தது. சம்பவத்துக்குப் பிறகு அந்த நிகழ்வை குறிப்பிட்டு டேவ் பேசினார்.

அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக விழாவில் பங்கேற்ற கிறிஸ் ராக் மேடையேறி “அது வில் ஸ்மித்தா” எனச் சொல்லவும் மக்களிடையே சிரிப்பலை எழுந்தது. காமெடி நடிகர்களை மேடையில் தாக்கும் நிகழ்வு அதிகரித்து வருவது இணையதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.