கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு எதிராக வாதாட சென்ற ப.சிதம்பரத்துக்கு எதிராக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 2017-ல் மெட்ரோ டயரி நிறுவனத்தில் தனக்குள்ள 47% பங்குகளையும் கெவந்தர் அக்ரோ நிறுவனத்துக்கு மாநில அரசு ரூ.80 கோடிக்கு விற்றது. அடுத்த சில வாரங்களில் கெவந்தர் நிறுவனம் 15% பங்குகளை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.135 கோடிக்கு விலைக்கு விற்றது.
இதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவரும் மேற்குவங்க காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 2018-ல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர் மனுதாரரான கெவந்தர் அக்ரோ சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆஜரானார். பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே வந்த ப.சிதம்பரத்தை சூழ்ந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் குழுவினர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திரிணமூல் காங்கிரஸின் ஏஜென்ட் ப.சிதம்பரம் என கோஷமிட்டனர். தனது காரை நோக்கிச் சென்ற ப.சிதம்பரத்தைப் பார்த்து தனது கருப்பு கவுனைக் காட்டி திரும்பிச் செல்லுங்கள் என ஒரு பெண் வழக்கறிஞர் கோஷம் எழுப்பினார். இதற்கு ப.சிதம்பரம் எந்த பதிலும் சொல்லாமல் காரில் புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.