வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புருசல்ஸ்: ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் தலைமை, நேட்டோ, அமெரிக்கா உள்ளிட்டவை தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டன.
இதில் சொகுசு கப்பல்கள், சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகள், வங்கி கணக்குகள், ஹெலிகாப்டர்கள், கலைப் பொருட்கள், பிரபல ஓவியங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள மேற்கண்ட முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் கருத்து தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் திரட்டப்படும் நிதியை பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மரியபோல், லவிவ், கீவ் உள்ளிட்ட நகரங்களை மறுசீரமைக்க இந்த நிதி உதவும் என்று கூறிய அவர், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்ய சொத்துக்களை முடக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைன் அரசு இதுகுறித்து கூறுகையில் உக்ரைனில் சேதமடைந்த நகரங்களை மறுசீரமைக்க 600 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement