ராஜஸ்தானில் இருந்து வரவழைத்து ஒட்டக பாலில் டீ தயாரித்து கொடுக்கும் திருச்சியை சேர்ந்த பட்டதாரி சகோதரர்கள்

திருச்சி:

சேரன் இயக்கத்தில் நடிகர்கள் பார்த்திபன், முரளி நடித்த வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடிகர் வடிவேல் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அதில் நீல கலர் ஜிப்பா போட்டுக்கொண்டு ஊருக்குள் அவர் அடிக்கும் லூட்டி பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டது.

அதில் ஒரு டீக்கடைக்கு சென்று ஒட்டகப்பால் டீ போடு…, ஒட்டகப்பால் டீ போடு… என்று எத்தனை நாள் சொல்வது என டீக்கடை மாஸ்டரை கலாய்ப்பார். அப்போதுதான் ஒட்டகப்பாலின் மவுசு வெளி உலகுக்கு தெரிய வந்தது. இப்போது வடிவேல் கேட்டு கிடைக்காத ஒட்டகப்பால் திருச்சியில் கிடைக்கிறது.

2019ம் ஆண்டு திருச்சியில் பாரம்பரிய அரிசி வகைகளுக்கான மார்கெட்டிங் ஏஜென்சியை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான ராகேஷ்குமார், சுரேந்திர குமார் ஆகியோர் தொடங்கினர். இதற்காக ராகேஸ்குமார் ஹூண்டாய் நிறுவன வேலையை உதறினார். சுரேந்திரகுமார் ஐ.டி. கம்பெனி டீம் லீடர் வேலையை விட்டு விட்டார்.

இதுபற்றி சுரேந்திரகுமார் கூறும்போது, இந்த சமூகத்துக்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கண்ட நிறுவனத்தை தொடங்கினோம். நாங்கள் பாரம்பரிய அரிசியினை வாங்கி விற்கவில்லை.

இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் விதைகளை கொடுத்து விளைவித்து மார்க்கெட் விலைக்கு வாங்கி சமைத்து கொடுக்கிறோம். இங்கு பலருக்கும் பாரம்பரிய அரிசி, தானியங்களில் உணவு சமைப்பதற்கு தெரியாது.

எங்கள் ஓட்டலில் பாமாயில் சேர்த்து கொள்வதில்லை. மரச்செக்கு கடலை எண்ணை, நல்லெண்ணை மட்டுமே பயன்படுத்துகிறோம். மைதா பயன்படுத்துவதில்லை. தினமும் ஒரு மூலிகை தண்ணீர் கொடுக்கிறோம்.

இங்கு கிச்சிலி சம்பா அரிசியில் சாப்பாடு சமைக்கப்படுகிறது. இது 130 நாட்கள் விளையும். இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் இருக்கும். இன்னும் பல ரகங்கள் உள்ளன.

தற்போது இங்கு ஒட்டகப்பால் விற்பனை செய்கிறோம். பசும் பாலுக்கு நிகரானது கிடையாது. அதற்கு அடுத்தபடியாக ஆட்டுப்பால், கழுதைப்பால், அதற்கு அடுத்த இடத்தில் ஒட்டகப்பால் உள்ளது. ஒட்டகப்பாலில் 10 மருத்துவ குணங்கள் உள்ளன. ஒட்டகப்பால் குடித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

எனது மாமா 6 வருடத்திற்கு முன்பு 100 மில்லி ஒட்டகப்பால் குடிக்க ரூ.2000 செலவழித்து 3000 கி.மீட்டர் தொலைவில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்று வருவார். அவரின் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்தது. இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து பலரும் நமக்கு தெரியாமல் வடமாநிலங்களுக்கு செல்கின்றனர். ஆகவே தான் ஒட்டகப்பால் விற்பனையை தொடங்கி உள்ளோம்.

பசும்பால் ஒன்றரை நாள் தாக்கு பிடிக்கும். ஆட்டுப்பால் 14 நாட்கள் இருக்கும். கழுதைப்பால் 30 நாள் கெடாமல் இருக்கும். ஆனால் ஒட்டகப்பால் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். காரணம் ஒட்டகப்பாலில் உப்புத்தன்தமை இருக்கும். இதனால் வெகுநாட்கள் கெடாமல் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள சித்தா ஆஸ்பத்திரிகளுக்கும் ஒட்டகப்பால் சப்ளை செய்கிறோம்.

ராஜஸ்தான் சத்திரியில் உள்ள கும்பல்கர் ஒட்டக பண்ணையில் இருந்து ஒட்டகப்பால் பெறுகிறோம். அரசின் வழிகாட்டு நெறிமுறைப்பட பேக்கிங் செய்து பால் வருகிறது. அங்கு ஏற்றிவிட்டால் 3 நாட்களில் நமது கைக்கு பால் வந்துவிடும். ஒட்டகப்பாலை வடிவேல்சார்தான் பிரபலம் செய்தார்.

100 மில்லி ஒட்டகப்பால் ரூ.90க்கு விற்பனை செய்கிறோம். ஒட்டகப்பால் டீ ரூ. 60க்கு விற்பனை செய்கிறோம். ஒரு சிலர் கேன்சர் செல்களை அழிக்க வல்ல ஒட்டக கோமியத்தையும் கேட்கிறார்கள். அதற்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் ஒட்டகப்பாலின் மகத்துவத்தை சொல்லி இருக்கிறார்.

இதனால் இஸ்லாமிய சகோதரர்களிடம் வரவேற்பு அதிகம் உள்ளது. நெய்வேலியில் இருந்து மூளை வளர்ச்சி குன்றிய தனது மகனுக்கு ஒட்டகப்பால் அவரின் தாயார் வாங்கி சென்று கொடுத்துள்ளார். அதன்பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். விரைவில் தமிழகம் முழுவதும் ஒட்டகப்பால் கிளைகள் தொடங்கப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.