புதுடெல்லி: மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளில் பாங்கு முழக்கத்துக்கான ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி வருகிறார். இதனால் மகாராஷ்டிர எதிர்க்கட்சியான பாஜகவுடன் நெருக்கமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
இச்சூழலில் வரும் ஜூன் 5-ம் தேதி, உ.பி.யின் அயோத்திக்கு செல்லவிருப்பதாக ராஜ் தாக்கரே அறிவித்துள்ளார். ஆனால் இவரது பயணத்துக்கு அயோத்தி அருகிலுள்ள கோண்டா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரிஜ் பூஷண் கூறும்போது, “அயோத்தி வருவதற்கு முன் ராஜ் தாக்கரே வடமாநிலத்தவர் முன் கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தான் அவரை அயோத்திக்குள் நுழைய அனுமதிப்போம். ஏனெனில், மகாராஷ்டிராவில் வட மாநிலத்தவரை அவமானப்படுத்தி விரட்டியவர் ராஜ் தாக்கரே. எனவே அவர் மன்னிப்பு கோரும் வரை அவரை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சந்திக்கக் கூடாது” என்றார்.
இந்த அறிவிப்பால் வட மாநிலத்தவரை எதிர்த்து 2008-ல் ராஜ் தாக்கரே நடத்திய வன்முறை நினைவு கூரப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரவிருக்கும் மகாராஷ்டிர தேர்தலில் அவரது கட்சியை பாஜக கூட்டணியில் சேர்ப்பதும் சிக்கலாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் அரசியல் ஆதாயத்துக்காக தமிழர்களை எதிர்த்து முதல்முறையாக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர் சிவசேனா தலைவர் பால் தாக்கரே. அவரது சகோதரர் மகனான ராஜ் தாக்கரே, சிவசேனாவில் 12 வருடங்கள் பால் தாக்கரேவுக்கு நெருக்கமாக இருந்தார்.
ஆனால் பால் தாக்கரே தனக்குப் பின் தனது மகன் உத்தவ் தாக்கரேவை கட்சித் தலைவராக்கினார். இதனால் 2005-ல் சிவசேனாவை விட்டு வெளியேறி எம்என்எஸ் கட்சியை தொடங்கினார் ராஜ் தாக்கரே.
இவரும் பால் தாக்கரேவை பின்பற்றி ‘மண்ணின் மைந்தர்’ பிரச்சினையை கையில் எடுத்தார். கடந்த 2008-ல் இவர் உ.பி. பிஹார் உள்ளிட்ட வடமாநிலத்தவர்களால் மகாராஷ்டிராவினருக்கு வேலை இழப்பு ஏற்படுவதாக போர்க்குரல் கொடுத்தார். இதனால் நிகழ்ந்த வன்முறையால் அப்போது 2 பேர் உயிரிழந்தனர்.