டாடா குழுமத்தில் டி.சி.எஸ் நிறுவனத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. மிக அதிகமான சந்தை மதிப்பு கொண்ட அந்த நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தைவிட அதிகமாக லாபம் ஈட்டி, இப்போது பிசினஸ் மீடியாக்களின் பேசுபொருளாக மாறியிருக்கிறது டாடா ஸ்டீல்.
கடந்த நிதி ஆண்டில் டி.சி.எஸ் நிறுவனம் ரூ.38,449 கோடி அளவுக்கு லாபம் ஈட்டியது. இதே நிதி ஆண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.41,749 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி, டி.சி.எஸ்.யைப் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. அதே போல, நிறுவனத்தின் கடன் கடந்த 2020-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. ஆனால் 2021-22 நிதி ஆண்டில் கடன் ரூ.51,049 கோடியாக குறைந்துள்ளது.
இந்த டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வரலாறு நூற்றாண்டைத் தாண்டியது. இந்த நூறு ஆண்டுகளில் அந்த நிறுவனம் திருப்புமுனைகள் பலப்பல. அந்தத் திருப்புமுனைகள் பற்றி இனி பார்ப்போம்.
டிஸ்கோ தொடங்கிய டாடா குழுமம்
டாடா குழுத்தின் ஜம்ஜெட்ஜி டாடா 1867-ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் ஒரு உரையைக் கேட்கிறார். அதில் சர்வதேச அளவில் யார் இரும்பு மற்றும் ஸ்டீலைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அந்த நாடே பலமிக்க நாடாக முடியும் என்பதை கேட்கிறார். அப்போது முதல் ஸ்டீல் நிறுவனத்தைத் தொடங்கி நினைக்கிறார் ஜம்ஷெட்ஜி டாடா. ஆனால், 1907-ம் ஆண்டுதான் டாடா ஐயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி (டிஸ்கோ) தொடங்கப்படுகிறது.
பங்குச் சந்தை மூலம் பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைத் திரட்டிய டாடா குழுமம், 1912-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி டிஸ்கோ நிறுவனத்தைத் தொடங்குகிறது. 1500 ஏக்கரில் ஆலை, 1.5 லட்சம் ஏக்கரில் ஜம்ஷெட்பூரில் டவுன்ஷிப் அமைக்கப்படுகிறது.
அடுத்த இரு ஆண்டுகளில் முதல் உலகப்போர் தொடங்குவதால் டிஸ்கோ நிறுவனத்துக்கு ஆர்டர்கள் குவிகின்றன. இந்த நான்கு ஆண்டு காலம் மட்டும் மூன்று லட்சம் டன் ஸ்டீலை போருக்காக டிஸ்கோ கொடுத்திருக்கிறது. ஆனால், போர் முடிந்த அடுத்த சில வருடங்களில் ஸ்டீல் தேவை குறைகிறது. இந்தியாவுக்கு வரும் ஸ்டீலும் அதிகமாகிறது என்பதால், கடும் நஷ்டம். இந்த சமயத்தில் ஏற்கெனவே செய்யப்பட்ட விரிவாக்க நடவடிக்கைகளையும் டிஸ்கோ செய்தது. தொரோப் டாடா (Dorob Tata) தன் மனைவின் நகைகளை அடமானமாக வைத்து நிதி திரட்டி விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டார். மீண்டும் 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியதால், ஸ்டீலுக்கான தேவை மீண்டும் உயர்ந்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு…
சுதந்திரத்துக்குப் பிறகு டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்கு எல்லை இருக்கிறது. அதனால் விரிவாக்கப்பணிகளுக்கு அனுமதி கிடையாது. அதே சமயம், மத்திய அரசின் பொதுத்துறை ஸ்டீல் நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன. அதனால் போட்டி அதிகரித்தது.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியாவில் உற்பத்தியாகும் ஸ்டீலில் 75% டாடா வசம். ஆனால் 1967-ல் 25% ஸ்டீல் மட்டுமே டாடா குழுமம் வசம் இருந்தது.
வெளிநாட்டில் இருந்து ஸ்டீல் இறக்குமதி செய்வதற்கு கட்டுபாடுகள் இருந்தன. அதே போல, நிறுவனத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. டாடா ஸ்டீல் வசம் ரூ.17.5 கோடி பணம் இருந்தது. இந்த பணத்துக்கான அந்நிய செலாவணியை மத்திய அரசு வழங்காததால், அந்த திட்டம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
அந்த காலத்தில் தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்குவது என்பது வழக்கமாக நடைபெறும் செயலாக இருந்தது. 1978-ம் ஆண்டு ஜனதா அரசும் டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேசியமயமாக்கும் திட்டத்தை வைத்தது.
அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. டிஸ்கோ நிறுவனத்தில் டாடாவுக்கு 5 சதவிகிதத்துக்கும் குறைவான பங்குகளே இருந்தன. ஆனால், மத்திய அரசு பல்வேறு நிறுவனங்கள் மூலமாக 45% பங்குகளை வைத்திருந்தது. அதனால் தேசியமயமாக்கும் திட்டத்தை முன்வைத்தது. சுதந்திரத்துக்கு முன்பு இருந்து செயல்பட்டுவருவது மற்றும் டிஸ்கோ தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக தேசியமயமாக்கும் திட்டம் தள்ளிப்போடப்பட்டது.
இருந்தாலும் கொல்கத்தாவின் ஹவுரா பாலம், பக்ரா நங்கல் அணை, கண்ட்லா துறைமுகம், ரயில் பேக்டரி என இந்தியாவின் பெரும்பாலான திட்டங்களுகான தேவையை டாடா குழுமத்தின் ஸ்டீல் பூர்த்தி செய்தது.
1991-ம் ஆண்டு…
இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், டாடா ஸ்டீலுக்கும் முக்கியமான ஆண்டு, 1991. இந்த ஆண்டுதான் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. அதே போல, டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா நியமனம் செய்யப்பட்டார். ஸ்டீல் இறக்குமதிக்கோ, உற்பத்திக்கோ தடையில்லை என்பதுடன், யார் வேண்டுமானாலும் நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜிண்டால், மிட்டல், ரூயா உள்ளிட்டோர்கள் ஸ்டீல் நிறுவனங்களைத் தொடங்கினார்கள். போட்டி அதிகரித்தது. 80 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ரூ.180 கோடி நஷ்டம் என்னும் நிலையை நோக்கி டாடா ஸ்டீல் சென்றுகொண்டிருந்தது.
அப்போது அங்கு சென்றிருந்த ரத்தன் டாடா ஒரு டன்னுக்கு உற்பத்திச் செலவினை ரூ.500 குறைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்தார். நிதி ஆண்டின் மத்தியில் ஆய்வு செய்தபோது ரூ.350 மட்டுமே குறைந்திருந்தது. ஆனால், டன்னுக்கு ரூ.500 ரூபாய் குறைக்க வேண்டும் என்னும் இலக்கில் உறுதியாக இருந்ததால், ரூ.180 கோடி நஷ்டம் என்னும் சூழலில் இருந்து அந்த நிதி ஆண்டில் லாபத்துக்கு மாறியது டாடா ஸ்டீல்.
இதன்பிறகு செலவினைக் குறைப்பதற்கு தொடர்ந்து பல யுத்திகள் உருவாக்கப்பட்டுக்கொண்டே வந்தன. இறுதியாக, 2004-ம் ஆண்டு சர்வதேச அளவில் குறைந்த செலவில் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனமாக டாடா உயர்ந்தது. ஒரு டன் ஸ்டீலை உற்பத்தி செய்ய டாடா ஸ்டீலுக்கு 310 டாலர் செலவானது. ஆனால், இரண்டாவது இடத்தில் இருக்கும் போஸ்கோ நிறுவனத்துக்கு 356 டாலர் செலவானது.
விரிவாக்க நடவடிக்கைகள்…
ஜம்ஷெட்பூர் ஆலை முழு உற்பத்தித்திறனை எட்டியவுடன் விரிவாக்கப் பணிகளில் கவனம் செலுத்தியது டாடா. ஒடிஷாவில் உள்ள காலிங்நகர் என்னும் இடத்தில் 15 மில்லியன் டன் தயாரிக்கும் திட்டத்தை டாடா கொண்டுவந்தது. ஆனால், போராடங்கள் நடந்ததால் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், சிங்கூரைப் போல இந்தத் திட்டமும் வீணாகும் என்றே பலரும் கருதினார்கள். ஆனால், அங்குள்ள மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவமனை அமைத்து கொடுத்தது டாடா. இதனால் டாடாவின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட மக்கள் அங்கிருந்து விலகினார்கள்; திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திட்டமிடப்பட்ட தொகையைவிட மூன்று மடங்குக்கு செலவானது. 2015-ம் ஆண்டு இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்தியாவில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவந்த டாடா ஸ்டீல், சர்வதேச அளவுக்கு செல்வதற்காக திட்டமிட்டது. சிங்கப்பூரை சேர்ந்த நாட் ஸ்டீல், தாய்லாந்தை சேர்ந்த மில்லினியம் ஸ்டீல் ஆகிய நிறுவனங்களை முறையே 2004 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் வாங்கியது.
கோரஸ் கையகப்படுத்தல்…
ஆசியா பிராந்தியத்தித்தில் மட்டுமே கவனம் செலுத்தியதில் திருப்தி அடையாத டாடா ஸ்டீல், மேற்கு நோக்கி பார்வையைத் திருப்பியது. இங்கிலாந்தை சேர்ந்த கோரஸ் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டது. ஒரு பங்கினை 4.55 பவுண்ட் கொடுத்து வாங்குவதாக அறிவித்தது.
ஆனால், பிரேசில் நாட்டை சேர்ந்த சி.எஸ்.என் என்னும் நிறுவனம் போட்டியில் குதித்தது. ஒரு பங்குக்கு 4.77 பவுண்ட் தருவதாக அறிவித்தது. கோரஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு இரு நிறுவனங்களும் போட்டி போட்டன.
கொஞ்சம் கொஞ்சமாக தொகை உயர்ந்துகொண்டே வந்தது. சி.எஸ்.என் நிறுவனம் 6.03 பவுண்ட் வழங்குவதாக அறிவித்தது. ஒரு பங்குக்கு 6.08 பவுண்ட் வழங்க டாடா ஸ்டீல் முடிவெடுத்தது. மொத்தம் ரூ.53,500 கோடி கொடுத்து வாங்கியது.
பிரிட்டீஷ் நிறுவனத்தை இந்திய நிறுவனம் வாங்கியது, ஐரோப்பாவின் மிகப்பெரிய டீல் இது என பெரிதாக பேசப்பட்டதுடன், நாளிதழ்களில் அதிகம் பேசும் விஷயமாக மாறியது. இதனைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கையகப்படுத்தத் தொடங்கின. அப்போது டாடா ஸ்டீல் 5 மில்லியன் டன் உற்பத்தி மட்டுமே செய்தது. ஆனால், கோரஸ் 18 மில்லியன் டன் உற்பத்தி செய்தது. இதனால் உற்சாகம் அதிகமாக இருந்தது.
ஆனால் இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. கோரஸ் நிறுவனத்தை வாங்கிய அடுத்த ஆண்டு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் சர்வதேச மந்தநிலை உருவானதால் ஸ்டீல்களுக்கான தேவையைக் குறைத்தது. அதனால் அடுத்த சில ஆண்டுகள் கோரஸ் பெரிய நஷ்டத்தை டாடா குழுமத்துக்குக் கொடுத்தது.
தொடர்ந்து முதலீட்டை அதிகரித்த டாடா ஸ்டீல்…
இந்த நிலையில், 2018-ம் ஆண்டு பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை (ரூ.35,000 கோடி) டாடா ஸ்டீல் வாங்கியது. அதனால் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கடன் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது.
ஒரு காலத்தில் ஸ்டீல் பிரிவில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஐரோப்பா, சீனாவில் தயாராகும் ஸ்டீல்களை நம்பி இருந்தது. ஆனால், சீனா ஸ்டீல் பிரிவில் கூடுதல் முதலீட்டை செய்யவில்லை. ஆனால், டாடா ஸ்டீல் தொடர்ந்து முதலீட்டை உயர்த்தி வருகிறது. உற்பத்தித்திறனும் உயர்ந்து வருகிறது. மேலும், ஒரு காலத்தில் டாடா ஸ்டீல் பிஸினஸுக்கு வெளிநாட்டை மட்டுமே நம்பி இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் தேவையே உயர்ந்துவருகிறது. போர் காரணமாக ஸ்டீல் விலை உயர்ந்திருப்பதால், டாடா ஸ்டீல் லாபமும் உயர்ந்திருக்கிறது.
ஸ்டீல் என்பது சைக்கிளிக்கல் பிஸினஸ் என்பது உண்மைதான் என்றாலும் அதனால் மட்டுமே இந்த வெற்றி அடையவில்லை.
“தற்போது டாடா ஸ்டீல் ஆலையை நாம் புதுப்பிக்காவிட்டால் பத்தாண்டுகளுக்கு பிறகு டாடா ஸ்டீல் ஆலை மியூசியமாக மாறும். அப்போது நாம் டிக்கெட் மட்டுமே கொடுக்க முடியும்’’ என 1980-களில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஜன்ஷெட் இரானி, தலைவர் ஜே.ஆர்.டி டாடாவிடம் கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியான ஐடியாக்கள் மட்டுமே டாடா ஸ்டீலை இந்தளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இல்லை எனில் டாடா ஸ்டீலின் வெற்றி வரலாற்றில் மட்டுமே இருந்திருக்கும்.