மும்பை: இந்திய வர்த்தக சந்தையில் பெரும் நிறுவனமாக உருவாகியுள்ள ரிலையன்ஸ், தொழில் உச்சம், கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலையில் புதிய வர்த்தக வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
இந்திய பொருளாதார சந்தையில் அதிக பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் அம்பானி. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் தொழில்கள் தொடங்கி வெற்றிகரமாக செய்து வருகிறார்.
முகேஷ் அம்பானி 1901-ம் ஆண்டு தனது குடும்ப வணிகத்தில் இணைந்தார். பல்வேறு நிறுவனங்களிலும் பல்வகையான பொறுப்புகளை ஏற்று பணிபுரிந்தார். தகவல் தொடர்பு, உள்கட்டமைப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், பெட்ரோலியம் சுத்திகரிப்பு, பாலியஸ்டர் இழைகள், எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டார்.
கடந்த 2002 இல் திருபாய் அம்பானி காலமான பிறகு முகேஷ் மற்றும் அவரது சகோதரர் அனில் ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்றனர். இருப்பினும், சிறிது காலத்திற்குப் பிறகு, சகோதரர்கள் போட்டியிட ரிலையன்ஸின் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டனர்.
இதன்படி ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் எரிவாயு, எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனங்களை பெற்றுக் கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சகோதரர்கள் பைபர்-ஆப்டிக் நெட்வொர்க்கைப் பகிர்ந்து கொள்வதற்கான 220 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்தனர். இது ரிலையன்ஸ் வணிகப் பேரரசைப் பிரித்த பிறகு அவர்களின் முதல் ஒப்பந்தம் ஆகும்.
இதன் பிறகு முகேஷ் அம்பானியின் வர்த்தகம் பெருகியது. அதேசமயம் அனில் அம்பானி கடன்காரர் ஆனார்,
பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் என்ற தொழில்முறை சேவை நிறுவனம் கடந்த 2004 இல் உலகின் மிகவும் மதிக்கப்படும் வணிகத் தலைவர்களில் ஒருவராக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டது. 2006-ம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் இந்தியப் பொருளாதார உச்சி மாநாட்டின் இணைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2010-ம் ஆண்டில் அந்த அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினராக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்பானி, அவரது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் அவரது தாயார் என ஆறு பேருக்காக மும்பையில் பிரமாண்ட 27-அடுக்கு மாளிகையான ஆன்டிலியாவை முகேஷ் கட்டினார். 48,000 சதுர அடி கட்டிடத்தில் அதன் பராமரிப்புக்காக 600 பணியாளர்கள் உள்ளனர். மூன்று ஹெலிபேடுகள், 160 கார்கள் கொண்ட கேரேஜ், ஒரு தனியார் திரையரங்கம், ஒரு நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மாறும் தொழில்கள்
இந்தியாவின் பிரமாண்ட பணக்காரரான முகேஷ் அம்பானி பல தொழில்கள் செய்தாலும் அவரது முக்கிய தொழில் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு, எரிவாயு போன்றவை உள்ளது. இந்த தொழில் தற்போது கடும்போட்டி நிலவுவதுடன் தொழில் மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதானி முதலிடத்தில் இருப்பதாகவும், அவருக்கு 123.7 பில்லியன் டாலர் சொத்த இருப்பதாகவும் போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கிறார். அதானியை விட அம்பானியின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர் குறைந்து இருக்கிறது. அம்பானியின் சொத்து மதிப்பு 104.7 பில்லியன் டாலர் ஆகும். அம்பானியின் சொத்து மதிப்பு பெரிய அளவில் ஏறாமல் உச்சம் தொட்டு பின்னர் அப்படியே நிற்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனால் அவர் தனது தொழிலை வேறு வகையில் விரிவுபடுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் தனது முதலீட்டை புதிய துறைகளில், குறிப்பாக அதிகமான லாபம் தரக்கூடிய துறைகளில் செய்ய முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல துறைகளில் அவர் முதலீடு செய்து வருகிறார்.
புதிய துறைகளில் முதலீடு
இதன் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானி பார்மா துறையிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளார். 173 வருட பழைமையான இங்கிலாந்தைச் சேர்ந்த பூட்ஸ் பார்மா நிறுவனத்துக்கு இங்கிலாந்தில் 2,200 ஸ்டோர்கள் உள்ளன. மருந்துகள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை வணிகம் செய்துவரும் பூட்ஸ் நிறுவனத்தை வாங்க இருப்பதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தன்னுடைய தொழிலை அடுத்தகட்டத்துக்கு விரிவுபடுத்த உள்ளது.
இதுபோலவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகச் சேவை பிரிவான ரிவையன்ஸ் ரீடைல் ஈஷா அம்பானி தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஈஷா அம்பானி ஆடை வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார்.
இதற்காகப் பல முன்னணி மற்றும் பிரபலமான பிராண்டுகள் உடன் வர்த்தகக் கூட்டணி வைப்பது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களில் அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றித் தனது பிராண்டாக்கி வருகிறது.
இந்தியாவில் மேற்கத்திய நாடுகளின் பேஷன் பொருட்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலான வர்த்தகம் வெளிநாட்டிலேயே செய்யப்படும் காரணத்தால், இந்தியாவில் ஆடம்பர சந்தைக்கான வாய்ப்புகள் குறைவு. இந்தநிலையில் தான் இந்த வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இறங்கியுள்ளது.
வெவ்வேறு தொழில்கள், விதவித முதலீடு
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் மும்பையில் துவங்கிய ஜியோ வோல்டு பிளாசாவில் ஆடம்பர பொருட்களுக்கான புதிய வர்த்தகப் பிரிவை உருவாக்க உள்ளது. இந்திய பணக்காரர்களை ஈர்க்கும் வகையில் ஆடம்பர பிராண்டுகளின் பேக் முதல் ஷூ வரையில் அனைத்தையும் இந்த ஜியோ வோல்டு பிளாசாவில் விற்பனை செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் வயோகாம் 18 மீடியா நிறுவனம், பாரமவுன்ட் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, ஜேம்ஸ் முர்டோக் ஆதரவு கொண்ட போதி ட்ரீ சிஸ்டம்ஸ் தலைமையில் $1.8 பில்லியன் டாலர் புதிய முதலீடு பெற உள்ளது.
முகேஷ் அம்பானி 79 மில்லியன் டாலர் மதிப்பில். இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கியுள்ளது. இந்த, ஹோட்டலில் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டுள்ளது, 900 வருட வரலாற்றினை கொண்டு இருந்தாலும், இது 1908 வரையில் ஒரு தனியார் வீடாகவே இருந்து வந்துள்ளது. இந்த ஹோட்டலில் 49 சொகுசு படுக்கையறைகள் மற்றும் சூட் அறைகள் உள்ளன. இதன் மூலம் ஹோட்டல் தொழிலும் தீவிரமாக இறங்குகிறது ரிலையன்ஸ்.
இந்தியாவில் அதிகப்படியான சந்தை மதிப்புக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் இந்தியாவில் ரே-பான் பிராண்டட் ஸ்டோர்களைத் திறக்க இத்தாலியின் லக்சோட்டிகா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிதி திரட்டும் முகேஷ் அம்பானி?
இவ்வாறு அடுத்தடுத்து புதிய தொழில்களில் ரிலையன்ஸ் இறங்கியுள்ள நிலையில் புதிய நிதி ஆதாரங்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒருபகுதியாக ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் நிறுவனங்களுக்காக மிகப்பெரிய ஐபிஓவுக்கு முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் (ஆர்ஆர்விஎல்) ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.50ஆயிரம் கோடி முதல் ரூ.75ஆயிரம் கோடிவரை நிதி திரட்ட முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2023ம் நிதியாண்டு மதிப்பின்படி ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் மதிப்பு ரூ.8லட்சம் கோடியாகும், ரிலையன்ஸ் ஜியோவின் சந்தை மதிப்பு ரூ.7.50 லட்சம் கோடியாகும். ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துக்கு மட்டும் இந்தியாவில் 14,500 கிளைகள் உள்ளன.
மின்னணு வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு இதுவரை 42 கோடி வாடிக்கையாளர்கள் என உலகிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது.
இதன் மூலம் ஒரே முனையில் குவியும் தொழிலை வெவ்வேறு துறைகளில் மாற்றுவதன் மூலம் வேகமாகவும், வலிமையாகவும் ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் உருவாகும் என முகேஷ் அம்பானி கணிப்பதாக தெரிகிறது.