அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது புதிய செய்தி தொடர்பாளராக கரீன் ஜீன்-பியரை (Karine Jean-Pierre) நியமித்துள்ளார். ஆப்பிரிக்க – அமெரிக்கரை, அதிலும் தன் பாலீர்ப்புடைய பெண் செய்தித் தொடர்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.
44 வயதான ஜீன்-பியர், பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து முதன்மை துணைச்செய்திச் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
முதன்மை துணைச்செய்திச் செயலாளராகப் பணிபுரிந்த 43 வயதான ஜென் சாகி, அடுத்த வாரத்தின் இறுதியில் பதவியை விட்டுச்செல்வதால், அவருக்கு பதிலாக முதன்மை பணியிடத்தில் ஜீன்-பியர் இருப்பார். அதிபருடன் பணிபுரியும் பத்திரிக்கை செயலாளர்கள் தினமும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் சந்திப்புகளை நிகழ்த்துவதால், தற்போது இவருக்கு ஒதுக்கப்பட்ட பதவி சவாலானதாகவும், உயர்வானதாகவும் இருக்கும்.
இவருக்கு அளிக்கப்பட்ட பதவியையடுத்து, அவரை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜென் சாகி பதிவிட்டுள்ளார். “அவரது தனித்துவமான பாணி, புத்திசாலித்தனம், செயல்பாங்கு ஆகியவற்றைப் பார்ப்பதற்குக் காத்திருக்கிறேன்..” என தெரிவித்துள்ளார்.