கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
இது தவிர ஒவ்வொரு தமிழ்மாத முதல் நாளிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.
14-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மறுநாள் 15-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அன்று முதல் 19-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கலாம்.
கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கோவிலுக்கு செல்ல கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். வைகாசி மாத பூஜையிலும் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வைகாசி மாத பூஜைகள் முடிந்த பின்பு ஜூன் மாதம் 8-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
கோவில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறும். இதற்காக ஜூன் 8 மற்றும் 9-ந்தேதிகளில் கோவில் நடை திறந்து இருக்கும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.