ஷவர்மா சாப்பிட்ட 3பேர் மயக்கம் – பிரியாணி சாப்பிட்ட 13 பேர் மருத்துவமனையில் அனுமதி! தஞ்சை – புதுக்கோட்டையில் சம்பவம்…

சென்னை:  கேரளாவைத் தொடர்ந்து,  தமிழ்நாட்டிலும், பிரியா, ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3பேர் மயக்கம்  அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்த ஷவர்மாவால் மாணவி இறந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அதில் ஷிகெல்லா பாக்டீரியா (Shigella bacteria) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல உணவகங்களில் கெட்டுப்போன கறிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

ஒரத்தநாடு பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அதுபோல, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 27  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துரித உணவகங்களில் உள்பட பல அசைவ உணவகங்களில் விற்பனை செய்யப்படும் மாமிசங்கள் கெட்டுப்போய் இருப்பதாகவும், இறந்த விலங்குகளின் மாமிசங்களை உபயோகப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.