நீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும். அப்படி சில தினங்களுக்கு முன்னால் பள்ளிப்பட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனையைப்பற்றி பலரும் பேசியிருந்தார்கள். அதாவது, 17 வயதான அந்தச் சிறுவன் சம வயதுகொண்ட சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டார் என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம். சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அச்சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.
திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி ராதிகா, `பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படும் பணிகளை இந்தச் சிறுவன் செய்ய வேண்டும்’ என்று நூதன தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தார். பாலியல் குற்றமிழைத்த சிறுவனுக்கு இப்படிப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்காக வழக்கறிஞர் அஜிதாவைத் தொடர்பு கொண்டோம்.
“நிர்பயா வழக்குக்குப் பிறகு, 16 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் குற்றம் இழைத்தால், அவர்களையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகக் கருதியே அந்த வழக்கை நடத்த வேண்டுமென ‘இளம்சிறார் நீதி சட்டம்’ திருத்தப்பட்டுவிட்டது. இந்த வழக்கைப் பொருத்தவரை, குற்றம் செய்தவர் சிறுவன் என்றாலும், சட்டத்திற்கு முரண்பட்ட குற்றத்தைச் செய்தவர் என்ற அடிப்படையில் வழக்கமான போக்சோ சட்டத்தின்படியான தண்டனையைத்தான் தர வேண்டும். அதே நேரம், இதுபோன்ற வழக்குகளின் மற்ற கோணங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த வழக்கில் இருவருக்குமிடையில் விருப்ப உறவு, அதாவது காதல் இருந்திருக்கிறது. குற்றம் செய்யும் நோக்கத்தில் இது நிகழ்ந்திருக்காது என்றாலும் சட்டம் இதை அப்படிப் பார்க்காது. அதனால்தான், சில உயர்நீதிமன்றங்களில் இப்படிப்பட்ட குற்றத்துக்கு 10 வருடம் தண்டனை கொடுக்கப்படுகிறது. சில உயர் நீதிமன்றங்களில் தண்டனையைக் குறைத்தோ அல்லது விடுதலை செய்தோ சில தீர்ப்புகள் தரப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில், போக்சோ சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே மேற்குறிப்பிட்ட தீர்ப்பு உணர்த்துகிறது.
18 வயதுக்குக் குறைவான அந்தச் சிறுவனும் சிறுமியும் எந்தளவுக்கு ஒருவரையொருவர் விரும்பினார்கள்; காதலித்தார்கள் என்பது சட்டத்துக்குத் தெரியாது. என்றாலும் நியாயப்படி பார்க்க வேண்டும் என்பதும் சட்டத்தில் இருக்கிறது. தவிர, இளம் வயதினரின் காதலை போக்சோ சட்டத்தின் கீழ் கொண்டு வரக்கூடாது என்கிற கோரிக்கை குரல் பலதரப்பிலும் எழுந்துகொண்டிருக்கிறது.
வெளிநாடுகளில்கூட இப்படிப்பட்ட வழக்குகளில் பையனும் பெண்ணும் ஒரே வயதிலிருந்தால், அதைப் பெரிய குற்றமாகப் பார்க்க மாட்டார்கள். ஒருவரைவிட மற்றவர் 3 வயது அல்லது அதற்கும் மூத்தவர் என்றால் மட்டுமே அதைக் குற்றமாகப் பார்ப்பார்கள். தவிர, பதின்பருவ பாலியல் விஷயங்களில் குற்றம் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தைவிட பதின்பருவ ஹார்மோன் தூண்டுதலே அதிகமிருக்கும். இதை நாங்கள் `elopement case’ என்போம். இதுபோன்ற குற்றங்களில் அதன் அத்தனை பக்கங்களையும் ஆராய்ந்தே சட்டம் தீர்ப்பளிக்கும்” என்றார் வழக்கறிஞர் அஜிதா.