2 நீதிபதிகளுக்கு கொலிஜியம் பரிந்துரை மீண்டும் முழு பலத்தை எட்டும் உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு 2 நீதிபதிகளை கொலிஜியம் பரித்துரைத்துள்ளது மூலம், மீண்டும் 34 நீதிபதிகளுடன் முழு பலத்தை அது எட்ட உள்ளது.உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 34. கடந்த ஜனவரி 4ம் தேதி நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது. இந்நிலையில், காலியாக உள்ள 2 நீதிபதி பணியிடங்களில் அசாமின் கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பார்திவாலா ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் யு.யு.லலிதா, கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் நேற்று முன்தினம் பரிந்துரை செய்துள்ளது.இதை ஒன்றிய அரசு ஏற்கும் பட்சத்தில், மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து முழு பலத்தை எட்டும். கடந்த 2019ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்ற பிறகு, ஒரு நீதிபதி கூட உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்படவில்லை. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 600க்கும் மேற்பட்ட நீதிபதி காலி பணியிடங்கள் இருந்தன. கடந்தாண்டு என்.வி.ரமணா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜூலையில் ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு 9 நீதிபதிகளை நியமித்தார். இதுவரை 11 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியத்தில் அவர் ஒருமித்த கருத்தை உருவாக்கி உள்ளார். மேலும், ரமணா தலைமையிலான கொலிஜியம், இதுவரை பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்க 180 பேரை பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஒரே ஆண்டில் 3 தலைமை நீதிபதி1950ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து 2வது முறையாக இந்தாண்டு அடுத்த சில மாதங்களில் உச்ச நீதிமன்றம் 3 வெவ்வேறு தலைமை நீதிபதிகளை காண உள்ளது. தற்போதைய தலைமை நீதிபதி ரமணா வரும் ஆகஸ்ட் 26ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து, மூத்த நீதிபதியான யு.யு.லலிதா 2 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக பதவி வகித்து நவம்பரில் ஓய்வு பெற உள்ளார். பின்னர், டி.ஓய்.சந்திரசூட் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.