2024ம் ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது! மம்தா பானர்ஜி உறுதி…

கொல்கத்தா: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும்  ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று உறுதிபடக்கூறிய மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசின்  தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் என எதுவும் மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்று  தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக அம்மாநிலம் சென்றுள்ளார். மேற்குவங்காள மாநிலத்தில் சிலிகுரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது, கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம்’ என்றார். தொடர்ந்து பேசியவர், குடியுரிமை (திருத்தம்) சட்டம் பற்றி வதந்திகளை பரப்பியதற்காக திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக சாடினார்.

இதற்கு பதில் அளித்து செய்தியாளர்களிடம்  பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) தேவையில்லாமல் கேவலமான அரசியலுக்கு இழுக்கவே அமித் ஷா மாநிலத்துக்கு வந்ததாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார்., தான் BSFஐ மதிக்கிறேன், ஆனால் அது அமித்ஷாவின் வலையில் விழக்கூடாது என்றவர்,  அவர்கள் (பாஜக) ‘துக்டா’ செய்வதை நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் விவாகரத்து செய்ய விரும்புகிறார்கள், அவர்கள் சமூகங்களைப் பிரிக்க விரும்புகிறார்கள். அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ)  போன்றவற்றை கையில் வைத்துக்கொண்டு மாநில அரசுகளை மிரட்டி வருகின்றனர். அமித்ஷா சொல்வதுபோல குடியுரிமை சட்ட மசோதா மீண்டும் வராது. அது  காலாவதியானது என்றவர்,  “அவர்கள் CAA பற்றி பேசுகிறார்கள். அப்போது பிரதமர் மற்றும் முதல்வர்களை தேர்ந்தெடுத்தவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லவா? CAA மசோதா காலாவதியானது. அவர்கள் ஏன் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரவில்லை? குடிமக்களின் உரிமைகள் தடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையே நமது பலம்.

2024-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரமாட்டார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் என எதுவும் அமல்படுத்தப்படாது. அமித்ஷா தலைமறைவாகிவிடுவார். மேற்குவங்காளத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. உத்தரபிரதேசத்தை பாருங்கள். அங்கு சட்டம் – ஒழுங்கை பார்ப்பது உள்துறை மந்திரியின் வேலை தானே. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை புல்டோசர் கொண்டு உடைக்க முயற்சிக்காதீர்கள், நெருப்புடன் விளையாட வேண்டாம். சரியான பதிலடியை மக்கள் தருவார்கள்.

இவ்வாறு மம்தா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.