கொல்கத்தா :
மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம்’ என்றார்.
இந்நிலையில், சிஏஏ அமல்படுத்தப்படாது என்று மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், குடியுரிமை திருத்தசட்டம் குறித்து அவர்கள் (பாஜக) பேசுகின்றனர். பிரதமர், முதல்-மந்திரிகளை தேர்ந்தெடுத்தது இந்த நாட்டின் குடிமக்கள் கிடையாதா. சிஏஏ-வில் குறைபாடுகள் உள்ளன. இந்த மசோதாவை அவர்கள் (பாஜக) ஏன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்? குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் ஒன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமைதான் நம் வலிமை.
2024-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரமாட்டார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் என எதுவும் அமல்படுத்தப்படாது. அமித்ஷா தலைமறைவாகிவிடுவார். மேற்குவங்காளத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. உத்தரபிரதேசத்தை பாருங்கள். அங்கு சட்டம் – ஒழுங்கை பார்ப்பது உள்துறை மந்திரியின் வேலை தானே. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை புல்டோசர் கொண்டு உடைக்க முயற்சிக்காதீர்கள், நெருப்புடன் விளையாட வேண்டாம். சரியான பதிலடியை மக்கள் தருவார்கள்’ என்றார்.