எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் – ரியாஸ்தீன் ரியானின் திருமணம் நடந்திருக்கிறது. ரஹ்மான் இந்தத் திருமணத்தை மகள் கதீஜாவின் விருப்பத்தை ஒட்டி மிகவும் எளிமையாக நடத்தினார். மிகவும் பெர்சலான நிகழ்வாக திருமணம் முடிந்தது. ரஹ்மானின் மருமகன் ரியாஸ்தீன் ரியான் பல வருடங்களாக ரஹ்மான் ஸ்டுடியோவில் சவுண்ட் இன்ஜினீயராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது தொழில் திறமையையும் அவரது அமைதியான நல்ல குணங்களும் ரஹ்மானை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் அவரை தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்திற்கு வந்திருக்கிறார். பிறகு ரியாஸ்தீன் பெற்றோர்களை வரவழைத்து பேசி இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த நிக்காஹ் பேசி முடிக்கப்பட்டது.
சிலர் சொல்வதுபோல இது ரகசியத் திருமணமும் அல்ல.
காதல் திருமணமும் அல்ல. ரஹ்மான் மனம் வைத்து சந்தோஷமாக நடத்தி வைத்த திருமணம். ரஹ்மானின் பிரியமான அம்மா இல்லாத குறை நீங்க, அவரின் பெரிய படத்திற்கு முன்னாலேயே எளிமையான திருமணத்திற்கான மதச்சடங்குகள்
நடந்து முடிந்திருக்கின்றன. மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ரஹ்மான். இப்போதைக்கு வரவேற்பு நடத்தும் உத்தேசம் இல்லையாம். பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. குடும்ப நிகழ்வாக மட்டுமே இந்தத் திருமணம் நடந்திருக்கிறது. கதீஜா – ரியாஸ்தீன் வாழ்க்கையில் நல்ல அமைதியும், சாந்தமும், மகிழ்ச்சியும் பெருக வாழ்த்துவோம். அவர்கள் மீது தூவப்படும் மலர்களில் நம்முடையதும் இருக்கட்டும்.