குழந்தை ஒன்று வெள்ளந்தியாகச் சிரிக்கும் ‘கிரைனிங் கேர்ள்’ என்ற GIF சமூக வலைதளங்களில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான GIF ஆகும். இதில் இருக்கும் குழந்தை கைலியா போஸி (Kailia Posey) என்ற பிரபல டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளரின் படம் அவரது குழந்தைப் பருவத்தில் எடுக்கப்பட்டது. 16 வயதேயான இவர் அமெரிக்காவில் கடந்த மே 3-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்துக் கூறிய கைலியா போஸியின் தாயார் மார்சி போஸி கேட்டர்மேன், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை. என் அழகான பெண் குழந்தை இறந்துவிட்டாள். நாங்கள் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம்” என்றார்.
மேலும், அவர் குடும்பத்தினர் “அவள் ஒரு திறமையான இளம்பெண். அவளுக்கு முன்னால் பிரகாசமான எதிர்காலம் இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக அவள் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவசரமான முடிவை எடுத்துவிட்டாள். அவள் தனது வாழ்நாள் முழுவதும் பல போட்டிகளில் போட்டியிட்டு எண்ணற்ற கிரீடங்களையும் கோப்பைகளையும் வென்றவள்” என்று வருத்தத்துடன் கூறினர்.