தங்க நகைகளின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் மிகக் குறைவு. ஆனால், அதன் பராமரிப்பின் மீதும் ஆர்வம் கொள்வது அவசியமானது. நகையை சுத்தம் செய்வது என்பது, நகை பராமரிப்பில் முக்கியமான வழிமுறை.
தங்கம் மட்டுமல்லாமல், வைர நகைகளையும் வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்வதற்கான வழிகாட்டல்கள் இங்கே.
தங்க நகைகள்
* வளையல்கள், செயின்கள், மோதிரங்கள், காதணிகள் போன்ற தங்க நகைகளை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும். அதில் இரண்டு சொட்டு பேபி ஷாம்பூ சேர்த்துக் கலக்கி, அந்த நீரில் நகைகளை ஊறவைக்கவும்.
* பேபி டூத் பிரஷ் போல சாஃப்ட் பிரஷ் கொண்டு, நகைகளை மெதுவாகத் தேய்க்கவும். நகைகளின் இடைவெளிகளில் உள்ள அழுக்கை நீக்க, பிரஷ்ஷை மெதுவாக அங்கு தேய்க்கவும். அழுந்தத் தேய்த்தால் நகையின் டிசைன் பழுதாகலாம் என்பதால், மிகவும் கவனமாக, மென்மையாகத் தேய்க்க வேண்டும்.
* நகைகளை தண்ணீரில் சுத்தம் செய்து அலசிய பின்னர், உலரவைக்க அவற்றை டிஷ்யூ பேப்பர், பேப்பர் டவல் அல்லது காட்டன் போன்றவற்றில் வைக்க வேண்டாம். அது நகைகளில் ஸ்கிராட்ச் ஏற்படுத்தலாம், பளபளப்பைக் குறைக்கலாம். எனவே, பருத்தித் துணியில் விரித்து வைத்து நகைகளை உலரவைக்கவும்.
* அந்தந்த நகைகளை அது அதற்குரிய டப்பாக்களில் வைக்கவும். செயின், மாலை போன்றவை மடங்காமல், கம்மல் அழுந்தாமல், நகைக்கு எந்த வகையிலும் அழுத்தம் ஏற்படாத வகையில் நகை டப்பாக்களில் வைக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
வைர நகைகள்
* வைர நகைகளை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்யாமல்விட்டால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். எனவே, வைர நகைகளை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
* வைர நகைகளை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும் (நீரில் எதுவும் கலக்க வேண்டாம்). சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அந்நீரில் நகையை ஊறவைக்கவும்.
* மென்மையான பிரஷ் கொண்டு வைர நகையை தேய்க்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் மீண்டும் அலசவும்.
* பருத்தித் துணியில் நகையை உலரவைத்து, நகை டப்பாவில் எடுத்து வைக்கவும்.
குறிப்பு: தங்கை, வைர நகைகளை வெதுவெதுப்பான நீரிலேயே சுத்தம் செய்ய வேண்டும்.