மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இன்று காலை திடீர்
தீ விபத்து
ஏற்பட்டது. கட்டடம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்து குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த விபத்தில் தீயில் கருகி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இரவில் இருந்ததால் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.