பாலசோர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, மந்திரவாதி ஒருவர் தனது வீட்டில் அடைத்து வைத்து 79 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான அந்த பெண்ணுக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காண, கணவன் வீட்டார் ஒரு மந்திரவாதியை நாடி உள்ளனர். அவர், அந்த பெண்ணை சில மாதம் தனது வீட்டில் தங்க வைத்தால், சில பூஜைகள் செய்து பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில் அந்தப் பெண்ணை மந்திரவாதியின் வீட்டில் வலுக்கட்டாயமாக தங்க வைத்துள்ளனர். குழந்தையையும் அவருடன் விட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால், மந்திரவாதியோ அந்த பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் தேவையான உணவு வழங்கி உள்ளார்.
ஏப்ரல் 28ம் தேதி மந்திரவாதி தனது செல்போனை அந்த அறையில் விட்டுச் சென்றுள்ளார். அந்த போனில் இருந்து தனது பெற்றோரை தொடர்பு கொண்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளார். அவர்கள் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையை மீட்டுள்ளனர். தலைமறைவான மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், மந்திரவாதியின் வீட்டிற்கு செல்ல மறுத்தபோது, மயக்க மருந்து கொடுத்து அங்கு கொண்டு சென்றதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தனது புகார் மனுவில் கூறி உள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் கணவன், கணவனின் சகோதரர் மற்றும் மாமனார்-மாமியார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.