அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியமை, மக்களுடைய பொது வாழ்வைப் பாதுகாத்து சமூக நிலைபெறுதகுநிலையை உறுதிப்படுத்துவதற்கே

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியமைஇ மக்களுடைய பொது வாழ்வைப் பாதுகாத்து சமூக நிலைபெறுதகுநிலையை உறுதிப்படுத்துவதற்கேயாகும் என்று என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

நேற்று (மே 06) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவர்கள் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமைக்கான காரணம், சமகால பொருளாதார, சமூக நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்களுக்குத் தேவையான காரணிகளாகவுள்ள அரசியல் நிலைபெறுதகு நிலையை உறுதிப்படுத்தவும், மக்களின் பொது வாழ்வை தங்குதடையின்றி மேற்கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதென அரசாங்கம் தெரிவித்;துள்ளது.

குறுகியகால மற்றும் நீண்டகால விளைவுகளுடன் கூடிய காரணிகள் பலவற்றின் விளைவாக இலங்கை தற்போது சுதந்திரத்தின் பின்னர் மோசமான பொருளாதார சமூக ரீதியான ஆழமான மறுசீரமைப்புக்கள் பலவற்றை மேற்கொள்ள வேண்டுமென்பதே பொதுவான கருத்தாகவுள்ளது. இயலுமான வரை குறுகிய காலத்தில் வெளிநாட்டுக் கையிருப்புப் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்தல், பண்டங்கள் சேவைகள் விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரல் போன்றன அவற்றில் முன்னுரிமை வகிக்கின்றன.

சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான மகாசங்கத்தினர், ஏனைய வணக்கத் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், வர்த்தக சமூகத்தினர், சட்டத்தரணிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்கள் நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்கள் பற்றிக் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வெளியிட்ட அறிவித்தலில் மறுசீரமைப்பு முன்மொழிவுகள் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாடு எதிர்கொண்டுள்ள திடீர் நெருக்கடிச் சவாலான பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியை குறுகிய காலத்தில் முகாமைத்துவம் செய்வதாகும். மறுசீரமைப்பை ஆரம்பித்து மேற்கொண்டு செல்வதற்கான பலமானதும் நிலைபேறானதுமான அரசாங்கம் இருத்தல் தற்போதுள்ள முக்கிய தேவையாக இருப்பதை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

நிதிச் சலுகை வழங்கல் மற்றும் கடன் மீள்கட்டமைப்புக்காக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில் பல்தரப்பு நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடனான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு சாதகமான பதில்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை வென்றெடுப்பதற்குத் தேவையான பலம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரசியல் உறுதிப்பாடு மற்றும் சமூக அமைதி போன்றன முக்கிய நிபந்தனைகளாக உள்ளன.

தற்போது பல நாட்களாக தலைநகரிலும் நாடு தழுவிய ரீதியிலும் மேற்கொள்ளப்படும் ஆக்ரோசமான ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களின் வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. புகையிரதம் மற்றும் பொதுப் போக்குவத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் அன்றாட செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆடைக் கைத்தொழில் துறை உள்ளிட்ட உற்பத்தி தொழிற்சாலைகளின் இயக்கம் அடிக்கடி தடைப்படுகின்றது. பிள்ளைகள் பாடசாலை செல்வதற்கு இயலாமல் உள்ளது. அரச மற்றும் தனியார் துறைகளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் கடமைக்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இவ் ஆர்ப்பாட்டங்கள் மக்களுடைய பொது வாழ்வை முடக்குவது மாத்திரமன்றி பொறுளாதார நெருக்கடியை மேன்மேலும் தீவிரமடையச் செய்கின்றது.

அதனால், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மக்களுடைய பொது வாழ்வைப் பாதுகாத்தல், அத்தியாவசிய விநியோகங்கள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்லல், பொது மக்கள் சுதந்திரமாக போக்குவரத்துக்களில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடிகளை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்கான குறுகியகால நடவடிக்கையாக மாத்திரமே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இயல்புநிலை ஏற்பட்டவுடன் அது நீக்கம் செய்யப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.