ஆம்புலன்சுக்கு பணம் இல்லாததால் அவலம்- 2 வயது மகள் உடலை 25 கிலோ மீட்டர் பைக்கில் எடுத்து சென்ற தந்தை

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனய்யா. இவரது மனைவி அருணம்மா.

தம்பதியின் மகன் பிரவந்த் (வயது 5), மகள் அக்‌ஷயா (2). நேற்று முன்தினம் இருவரும் அங்குள்ள குளத்தில் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கினர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு குளக்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக 25 கிலோ மீட்டர் தூரம் உள்ள நாயுடு பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்‌ஷயா பரிதாபமாக இறந்தார். பிரவந்த் சிகிச்சைக்குப்பின் குணமானார்.

சீனய்யா இறந்த மகளின் உடலை கொண்டு செல்ல அரசு ஆஸ்பத்திரி ஆம்புலன்சு வேண்டுமென கேட்டார். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அரசு ஆம்புலன்சில் உடலைக் கொண்டு செல்ல முடியும். 5 மணிக்கு மேல் ஆம்புலன்ஸ் இயங்காது என தெரிவித்தனர்.

இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தனியார் ஆம்புலன்சை நாடிய போது சிறுமியின் உடலை கொண்டு செல்ல அவர்கள் அதிக பணம் கேட்டனர்.

அவரிடம் பணம் இல்லாததால் உறவினர் ஒருவரை வரவழைத்து தனது மகளின் உடலை தோளில் சுமந்தபடி பைக்கில் 25 கிலோமீட்டர் கொண்டு சென்றார்.

இந்த காட்சிகள் அனைத்தையும் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

கடந்த வாரம் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் இறந்த தனது மகனை ஒருவர் ஆம்புலன்சில் கொண்டு செல்ல பணம் இல்லாததால் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைக்கில் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் இறந்த மகளின் பிணத்தை பைக்கில் கொண்டு சென்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தும் விதமாக 24 மணி நேரமும் இலவச ஆம்புலன்சு வசதியை ஆந்திர மாநில அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.