நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம், இந்தியில் மட்டும் 400 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு இந்திய முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியானது.
ரசிகர்கள் எதிர்பார்த்ததுப் போன்றே, படத்தின் விஷுவல், சண்டைக் காட்சிகள், வசனங்கள், இசை என அனைத்தும் ‘கே.ஜி.எஃப். 2’ படத்தில் மிரட்டலாக இருந்தது. இதனால், இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது இந்தப் படம். முதன்முதலாக தென்னிந்தியாவை சேர்ந்த கன்னட மொழிப் படம் ஒன்று, பல்வேறு மொழிகளை பேசும் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.
குறிப்பாக பாலிவுட்டில் வசூல் ரீதியாக ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு, ‘கே.ஜி.எஃப். 2’ மாஸ் காட்டி வருகிறது. ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம், 21 நாட்களிலேயே வசூலில் இந்தியில் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தை ஓரங்கட்டி சாதனை படைத்தது. இந்நிலையில், 23 நாட்களில் இந்தியில் மட்டும் 401.80 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுவரை எந்த கன்னடப் படமும் சாதிக்காததை சாதித்துள்ளது ‘கே.ஜி.எஃப். 2’. ஒட்டுமொத்தமாக இதுவரை 1095.83 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.