இந்த மாதம் 30ஆம் திகதி முதல்… பிரித்தானியா அறிமுகம் செய்யும் புதிய விசா: சில பயனுள்ள தகவல்கள்



உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் பயின்ற மாணவர்களை பிரித்தானியாவுக்கு அழைப்பதற்காக புதிய விசா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது பிரித்தானியா.

High Potential Individual (HPI) visa என்று அழைக்கப்படும் இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள், இம்மாதம் (மே) 30 ஆம் திகதி முதல் வரவேற்கப்படுகின்றன.
 

இந்த விசா திட்டத்தின்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகள், தங்கள் கல்வித் தகுதிக்கேற்றாற்போல், பிரித்தானியாவில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு பணி செய்யவும், தங்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தால் பிரித்தானியாவுக்கு என்ன இலாபம் என்றால், பணி வழங்குவோர் ஸ்பான்சர்ஷிப்புக்கான கட்டணம் செலுத்தாமலே பட்டதாரிகளை பணிக்கமர்த்திக்கொள்ளலாம். பட்டதாரிகளோ பிரித்தானியாவுக்கு வந்தபின் எந்த துறையில் வேண்டுமானாலும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விசாவுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

பிரித்தானியாவுக்கு வெளியே, அதாவது வெளிநாடுகளில், முறையான பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 18 வயதுடைய எந்த நாட்டவரானாலும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விசா திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு பிரித்தானியாவிலிருந்து வேலைக்கான அழைப்பு வந்திருக்கவேண்டும் என்ற அவசியமோ, ஸ்பான்சர்ஷிப்போ தேவையில்லை.

நீங்கள் பிரித்தானியாவில் சொந்தத்தொழில் செய்யவோ, தன்னார்வலராகவோ பணியாற்றவோ கூட செய்யலாம்.

இந்த விசா ஒரு முறைதான் வழங்கப்படும், ஏற்கனவே பட்டதாரி விசா பெற்றவர்களுக்கு இந்த விசா வழங்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மொழித்திறன் தேவை

உங்கள் பட்டப்படிப்பு ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படாதிருந்தால், அதாவது நீங்கள் ஆங்கில மீடியம் வாயிலாக கற்கவில்லையென்றால், நீங்கள் மொழித்தேர்வில் குறைந்தபட்சம் B1 மட்டத்தில் வெற்றிபெறவேண்டும்.

விசாவுக்காக ஆகும் செலவு

இந்த விசாவுக்காக ஆகும் செலவு 715 பவுண்டுகள் ஆகும்.

மேலும், நீங்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு 31 நாட்களுக்கு முன்பிருந்தே, உங்கள் வங்கிக்கணக்கில் தொடர்ச்சியாக 28 நாட்களுக்கு 1,270 பவுண்டுகளுக்கு சமமான தொகை வைத்திருப்பதை காட்டவேண்டியிருக்கும்.

நீங்கள் 12 மாதங்களுக்கும் அதிகமாக பிரித்தானியாவில் வாழ்ந்துவந்தால் இந்த நிபந்தனை உங்களுக்குப் பொருந்தாது.

யார், எவ்வளவு காலம் பிரித்தானியாவில் தங்கலாம்?

இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும், முனைவர் மற்றும் அதற்கு சமமான படிப்பை முடித்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்கும் பிரித்தானியாவில் தங்க இந்த விசா வழிவகை செய்கிறது.

நீங்கள் உங்களுடன் உங்கள் கணவர் அல்லது மனைவி மற்றும் 18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளையும் அழைத்துவரலாம்.

விசா காலாவதியான பின்…

நீங்கள் நேரடியாக நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.

அதற்கு பதில், உங்கள் விசா காலாவதியாகும் முன்னரே, திறன்மிகு பணியாளர், start-up and innovator, exceptional talent அல்லது scale-up route போன்ற அனுமதிகளுக்கு மாறிக்கொள்ளலாம்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.