கொழும்பு :இலங்கை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கிஉள்ளது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.சமீபத்தில், இப்போராட்டத்தில் மாணவர்களும், தொழிற்சங்கத்தினரும் இணைந்து பார்லி., செல்லும் சாலையை முற்றுகைஇட்டனர்.
‘ராஜபக்சே சகோதரர்கள் ராஜினாமா செய்ய மறுத்தால், 11ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்’ என, தொழிற்சங்கத்தினர் எச்சரித்து உள்ளனர்.இந்த நெருக்கடி காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்தார். இந்த உத்தரவுக்கு முன், அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில் பெரும்பான்மையான அமைச்சர்கள், மகிந்த ராஜபக்சே பதவி விலக வற்புறுத்தியதாக கூறப்படுகிறதுகோத்தபய ராஜபக்சேவும், மகிந்தா ராஜபக்சேவை ராஜினாமா செய்ய வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து, இதுவரை பதவி விலக மறுத்து வந்த மகிந்த ராஜபக்சே, வேறு வழியின்றி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
துாதர்கள் கவலை
இலங்கையில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்திருப்பதற்கு, அமெரிக்கா, கனடா துாதர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.”இலங்கை பிரச்னைக்கு நீண்ட கால தீர்வு தான் உதவும்; அவசர நிலை உதவாது,” என, இலங்கைக்கான அமெரிக்க துாதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். கனடா துாதர் டேவிட் மெக்கின்னன் கூறும்போது, ”அமைதியாக போராட மக்களுக்கு உரிமை உள்ள நிலையில், அவசர நிலைபிரகடனத்திற்கு என்ன அவசியம்” என, கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement