”இவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை”-‘டான்‘ ட்ரெய்லர் விழாவில் சிவகார்த்திகேயன் ஃபீலிங் பேச்சு

உழைப்பவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை என ‘டான்’ திரைப்பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

‘டாக்டர்’ திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக பிரியங்கா மோகன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனீஷ்காந்த், பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்லூரி கதைக்களத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில், சென்னையில் ‘டான்’ படத்தின் ட்ரெயிலர் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகை பிரியங்கா மோகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

image

பின்னர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தான் ரசித்த தனக்குப் பிடித்த அத்தனை பேரையும் இந்தப் படத்தில் இணைத்துள்ள இயக்குநருக்கும், ‘டான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துகொடுத்த சூரிக்கும் நன்றி எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘டான்’ படம் வெற்றி அடைந்தால், முன்னணி நடிகர்களும் அறிமுக இயக்குநர்களுடன் சேர்ந்து நடிக்க முன்வருவார்கள் என்று தெரிவித்தார்.

விழாவில் அவர் தெரிவித்ததாவது, “உழைப்பவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. ஒரு படம் வெற்றியடைந்தால்தான், தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து படங்களில் முதலீடு செய்ய முடியும். ‘டாக்டர்’ படத்தின் வெற்றியை கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் வெற்றியடைந்தால் அறிமுக இயக்குநர்களை கொண்டு படம் எடுக்க நம்பிக்கை கொடுக்கும்.

image

நான் ரசித்த எனக்குப் பிடித்த அத்தனை பேரையும் இந்தப் படத்தில் இணைத்துள்ளனர். சமுத்திரகனி எனர்ஜி கொடுப்பார். எத்தனை பிரச்னையில் இருந்தாலும், தம்பி வாட பண்ணுவோம்டா, வெள்வோம்டா என்பார். அது போன்று இன்று யாரும் கூறுவதில்லை. கல்லூரி நாட்களில் எஸ்.ஜே.சூர்யா குரலில் பேசி நண்பர்களிடம் மிமிக்ரி செய்வேன். அதன் மூலமே கல்லூரிகளில் அடையாளப்பட்டுள்ளேன். இந்தப் படத்தில் அவருடனே நடித்துள்ளேன். இந்தப் படத்தில் எனக்கு பாடல் இருப்பதால், ஜோடி இருப்பதால் நாயகன் என பார்க்கலாம். ஆனால் இந்தப் படத்தில் இருப்பவர்கள் அனைவருமே நாயகர்கள்தான்.

பிரியங்கா மோகனிடம் எந்த சீனையும் கொடுக்கலாம். அவருக்கு தமிழ் நன்கு புரியும் என்பதால் இயக்குநருக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது. ‘டான்’ படத்தில் நல்ல கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. சிவாங்கி கேமராவுக்கு முன்னாடி ஒரு மாதிரி பின்னாடி ஒருமாதிரி இல்லை. எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பார். அவர் படம் முழுவது அங்கே வந்து கொண்டு க்யூட் நடிப்பை கொடுத்துள்ளார்.

image

அனிருத் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. படத்திற்கான பைனல் டச் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே முழு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். சிபி கடுமையாக உழைக்கிறார். நீங்கள் கடுமையாக உழைத்ததால்தான், அந்த நம்பிக்கையில்தான் நான் இங்கு நிற்கிறேன். உழைப்பவர்களை மக்கள் என்றும் கைவிட்டதே இல்லை. எனக்கு ஸ்பாட்டில் எதாவது பஞ்ச் போட தோன்றும். ஆனால் இந்தப் படத்தில்தான் எந்த டயலாக்கையும் போட முடியவில்லை. எனக்கு, பாலாவிற்கு எல்லாம் ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது. எந்த டயலாக்கையும் போட முடியாது என. ஆனால் முனீஸ்காந்த் மட்டும் இறுதிவரை டயலாக்கை சேர்க்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்.

எமோஷனுக்கு எப்போதும் நமக்கு கனக்ட் இருக்கிறது. சமூக வலைதளத்தில் பேசுவதெல்லாம் விளையாட்டாக போய்விடும். ஆனால் ரியல் லைஃபில் இருக்கும் எமோஷன் விஷயங்களை சொல்ல சிபி ஆசைப்பட்டார். ‘அண்ணாமலை’ படம் பார்த்துவிட்டு வீட்டில் வந்து பத்து மாடு வாங்க போறேன். படத்தில் வருவதுபோல பால் விற்க போறேன், ஸ்வீட் கடை வைக்க போறேன் சொன்னேன். அப்பாவை பார்த்த போது ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என நினைத்தேன். இறுதியில் மிமிக்ரி பண்ணினேன் உங்கள் கைதட்டலை பார்த்து புரிந்துகொண்டேன். இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.