உக்ரைன் அமைதி நடவடிக்கைக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு| Dinamalar

நியூயார்க்:உக்ரைனில் அமைதி திரும்ப ஐ.நா., பொதுச் செயலர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.

நல்லிணக்க முயற்சி

இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்தித்து அமைதிப் பாதைக்கு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
இதையடுத்து உக்ரைனில் அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கவும், அன்டோனியோ குட்டரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்கா தலைமையிலான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

தீர்மானம்

இதற்கு, இந்தியா உட்பட, 15 உறுப்பு நாடுகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எனினும் உக்ரைனில் அமைதி திரும்ப, இரு தரப்பும் சமரச பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானம் முதன் முறையாக தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் ரஷ்யா தொடுத்த போர் அல்லது கலகம் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.