டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 34. கடந்த ஜனவரி 4ம் தேதி நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது. இந்நிலையில், காலியாக உள்ள 2 நீதிபதி பணியிடங்களில் அசாமின் கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பார்திவாலா ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் யு.யு.லலிதா, கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் நேற்று முன்தினம் பரிந்துரை செய்தது. இந்நிலையில் கொலிஜியம் பரிந்துரையை ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி துலியா, குஜராத் நீதிபதி பர்திவாலா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து முழு பலத்தை எட்டியுள்ளது.