உலகின் 3வது உயரமான மலையில் தவறி விழுந்து இந்தியர் உயிரிழப்பு| Dinamalar

காத்மாண்டு:உலகின் மூன்றாவது மிக உயரமான, ‘கஞ்சன்ஜங்கா’ மலைச் சிகரத்தில் ஏற முயன்ற இந்தியாவைச் சேர்ந்த மலையேறும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம் தவறி விழுந்து உயிரிழந்தார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், உலகின் எட்டு உயரமான மலைச் சிகரங்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக, இங்கு மலையேற்ற வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முதல், மலைச் சிகரங்களில் ஏற அவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.
உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் ஏற, 316 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்தில் ஏற, 68 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள கஞ்சன்ஜங்கா மலைச் சிகரம், 8,586 மீட்டர் உயரமாகும். இது, உலகின் மூன்றாவது உயரமான மலைச் சிகரமாகும்.
இந்நிலையில், இந்த மலையில் ஏற முயன்ற நாராயணன் ஐயர், 52, என்ற இந்தியர், நேற்று முன்தினம் தவறி விழுந்து உயிரிழந்தார். 8,200 மீட்டர் உயரத்தில் இருந்தபோது, கடும் சோர்வு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் உடலை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேபாளத்தில், இந்த ஆண்டு மலையேற்றத்தின்போது உயிரிழந்த மூன்றாவது நபர் நாராயனண் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.