சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காபுர்தலா நவீன சிறையில் அதிகாரியாக பணிபுரிபவர் குர்நாம் லால்.
இவர் 50 கிலோ எலுமிச்சை பழத்தை கைதிகளின் உணவுக்காக வாங்கியதாக போலி கணக்கு காட்டி கிலோவுக்கு 200 ரூபாய் ஊழல் செய்துள்ளார்.
சிறைக்கு திடீரென சோதனை செய்ய வந்த அதிகாரிகள் குழு சிறைவாசிகளிடம் உணவு குறித்து கேட்டபோது அவர்கள் தங்களுக்கு எலுமிச்சை வழங்கவில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகல் குர்நாம் லாலை சஸ்பெண்ட் செய்தனர். மேலும் அவர் சிறைவாசிகளுக்கு தரமில்லாத உணவை வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சிறையில் சமைக்கப்படும் சப்பாத்தி 50 கிராமிற்கும் குறைவாக உள்ளதாகவும், இதனால் கோதுமை மாவிலும் ஊழல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல 5 நாட்களுக்கு ஒருமுறை காய்கறிகள் வாங்கப்பட்டதாக சிறை பதிவு நோட்டில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் சிறைவாசிகள் காய்கறியே சில நாட்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறியுள்ளனர்.