உதம்பூர்,; “ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைய, இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர்,” என, இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதி உபேந்திர திவிவேதி தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைய, பயங்கரவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். எனினும், நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு, அவற்றை முறியடித்து வருகின்றனர். ஊடுருவல்இந்நிலையில், வடக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவிவேதி நேற்று கூறியதாவது:போர் நிறுத்த உடன்பாட்டால், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், ராணுவத்தினர் இடையே மோதல் இல்லாத சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, பயங்கரவாதிகளின் ஊடுருவல்களை, பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகின்றனர். மறுபுறம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை, 21 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைய, இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர்.
பாதுகாப்பு
அவர்களின் ஊடுருவல்களை முறியடிக்க, எல்லையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.எல்லைக்கு அருகே, ஆறு முக்கிய பயங்கரவாத முகாம்களும், 29 சிறிய முகாம்களும் உள்ளன. அவற்றுக்கு அருகே தற்காலிக ஏவுதளங்களும் உள்ளன. இந்த பயங்கரவாத கட்டமைப்புகள் இருப்பதற்கு, பாகிஸ்தான் ராணுவமும் ஒரு முக்கிய காரணமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ‘பாதுகாப்பு படையினர் எப்போதும் உஷார் நிலையில் இருப்பதால், பாக்., பயங்கரவாதிகளின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்படும்’ என, இப்படைகளின் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைஜம்மு – காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நம் வீரர்கள் மீது, அங்கிருந்த சில பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பின், இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கிடையே, பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.