திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று ஏழு மணிநேரம் காத்திருந்தனர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறையை ஒட்டி பக்தர்கள் அதிக அளவில் வர தொடங்கி உள்ளதாலும் வார இறுதி நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை தரப்படுவதால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில் 70 ஆயிரத்தை தொடுகிறது.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால் டிக்கெட் இல்லாத பக்தர்களையும் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டத்தில் உள்ள 24 காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். எனவே தர்ம தரிசனத்திற்கு ஏழு மணிநேரமும் 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு இரண்டு முதல் மூன்று மணிநேரமும் தேவைப்படுகிறது.
நேற்று முன்தினம் 59 ஆயிரத்து 528 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 29 ஆயிரத்து 995 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.தரிசன அனுமதியுள்ள பக்தர்கள் 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தரிசனம் வாடகை அறை விஷயங்களில் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் 18004254141 9399399399 என்ற ‘டோல் ப்ரீ ‘எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துஉள்ளது.
Advertisement