வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சோமசேகர். இவருக்குத் திருமணமாகி, பெண் குழந்தை உள்ள நிலையில், அவர் மனைவி விவகாரத்து செய்துவிட்டார். பெண் குழந்தையை அவர் மனைவியே அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தனியாக வசித்துவந்த சோமசேகர், சென்னை பாடி புதுநகரைச் சேர்ந்த 40 வயதாகும் பேபிகலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சென்னை முகப்பேரிலுள்ள கோயிலில் நடைபெற்றது. இரண்டாவது மனைவி ஏற்கெனவே திருமணம் செய்து, முதல் கணவரை பிரிந்தவர்தான். இந்த நிலையில், சில நாள்களிலேயே மறுமண வாழ்க்கை, இருவருக்குமே கசக்கத் தொடங்கியது.
பேபிகலாவை அவரின் கணவர் சோமசேகரும், மாமியார் சாந்தாவும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரும், மாமியாரும் வெளியில் சென்றால், வீட்டுக்குள் வைத்து பேபிகலாவை பூட்டிவிட்டுத்தான் செல்வார்களாம். இது குறித்து, ஏப்ரல் 19-ம் தேதியன்றே பேபிகலா பாகாயம் காவல் நிலையத்தில் கணவன் மற்றும் மாமியார் மீது புகாரளித்துள்ளார். அன்றைய தினமே, பேபிகலா சென்னையிலிருக்கும் தனது தாய் வீட்டுக்கும் சென்றுவிட்டார். புகார் தொடர்பாக போலீஸார் அழைத்து விசாரணை நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால், ஏப்ரல் 28-ம் தேதி சென்னையிலிருந்து பாகாயம் காவல் நிலையத்துக்கு வந்த பேபிகலா, கணவரை அழைத்து விசாரித்து, தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியிருக்கிறார். அப்போது போலீஸார், ‘‘உங்கள் கணவர் ஏப்ரல் 21-ம் தேதியன்றே உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். உடலை அடக்கம் செய்து ஒரு வாரம் ஆகிறது. உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லையா?’’ என்று கேட்டிருக்கிறார்கள். கணவன் இறந்துவிட்டதாக கூறிய தகவலைக் கேட்டு பேபிகலா அதிர்ச்சியில் உறைந்து, காவல் நிலையத்திலேயே கதறி அழுதார்.
இதையடுத்து, ‘‘தனக்குத் தெரியாமல் கணவன் உடலை புதைத்துள்ளனர். அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. உடலை தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகாரளித்தார். இதையடுத்து, மிகக் கால தாமதாக ஒன்பது நாள்கள் கழித்து, வேலப்பாடி சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த சோமசேகரின் உடலை போலீஸார் இன்று காலை தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். உடல் புதைக்கப்பட்டு 16 நாள்கள் ஆவதால், மருத்துவக் குழுவினர் அங்கேயே பரிசோதனை செய்தனர். இந்தச் சம்பவம், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.